5. சங்கத் தலைவர் நக்கீரர்
தமிழ் வளர்த்த சங்கங்கள்
பாண்டிய மன்னர்கள் தமிழைக் காத்து வளர்ப்பதற்கு மூன்று சங்கங்களை அமைத்தனர். அவர்கள் முதன் முதல் தென்மதுரையில் சங்கம் அமைத்தார்கள். அதுவே தலைச் சங்கம் என்று சொல்லப்படும். கபாடபுரம் என்ற நகரில் இரண்டாம் சங்கத்தை அமைத்தனர். அதுவே இடைச்சங்கம் என்று சொல்லப்படும். தென்மதுரையும் கபாடபுரமும் இப்போது உள்ள குமரிக்கடலுக்குத் தெற்கே இருந்த நாட்டில் திகழ்ந்த நகரங்கள். பாண்டிய நாடு, குமரிக்குத் தெற்கிலும் பரந்திருந்த காலத்தில் அவை பாண்டியர் தலை நகரங்களாக விளங்கின. அப்பகுதி சிறிது சிறிதாகக் கடலுள் மூழ்கிவிட்டது. அதன் பின்னர் மூன்றாம் சங்கத்தை அமைத்தனர். அதுவே கடைச் சங்கம் என்று சொல்லப் படும்.
சங்கத்தின் தலைமைப் புலவர்
பாண்டியர் மூன்றாவது அமைத்த கடைச் சங்கம் இப்போது உள்ள மதுரை மாநகரில் விளங்கியது. இக் கடைச்சங்கத்தில் நாற்பத்நாற்பத்