பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. வசனநடை கைவந்த வல்லார்


பழந்தமிழ் நூல்கள்

நம் தாய்மொழியாகிய தமிழில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய நூல்கள் பல உள்ளன. சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் தோன்றிய நூல்கள் எல்லாம் செய்யுள் நடையிலேயே அமைந்தவை. சிலப்பதிகாரம், இறையனார் களவியல் உரை போன்ற சில நூல்களில் இடையிடையே உரைநடைப் பகுதிகள் காணப்படுகின்றன. அவையெல்லாம் செய்யுளைப் போன்ற நடையுடையனவே; எளிதாகப் பொருள் உணரும் இயல்புடையன அல்ல.

உரையாசிரியர்கள் உரைநடை

இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் போன்ற உரையாசிரியர்கள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு உரை வரைந்துள்ளனர். திருக்குறள் என்னும் அற நூலுக்குப் பரிமேலழகர் போன்ற பல உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர். கலித்தொகை, சிந்தாமணி போன்ற இலக்கியங்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரக் காவியத்திற்கு அடி-