பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தமிழ் காத்த தலைவர்கள்

வந்தனர். அதனால் தமிழ் வளர்ந்தது; தமிழர் உயர்ந்தனர்; தமிழ்நாடு தலைசிறந்த நாடாகத் தழைத்து ஓங்கியது.

தாய்மொழிப் பற்றும் தொண்டும்

தமிழையும் தமிழ்நாட்டையும் உயர்வு அடையுமாறு செய்தவர்கள் பலர். அவர்களில் பேரரசர்களும் உண்டு; சிற்றரசர்களும் உண்டு; வள்ளல்களும் உண்டு; செல்வர்களும் உண்டு; செந்தமிழ்ப் புலவர்களும் உண்டு. தாய்நாடும் தாய்மொழியும் தழைத்து ஓங்குமாறு செய்ய, ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற தொண்டைச் செய்ய வேண்டும். நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் இல்லாத மக்கள் நன்மக்கள் ஆகார். தமிழ்நாட்டில் தோன்றிய, ஒவ்வோர் ஆண்மகனும் நாட்டின் நன்மகனாக விளங்க முயல வேண்டும் ; ஒவ்வொரு பெண்மகளும் நாட்டின் நன்மகளாக விளங்க முயல வேண்டும். தாய்மொழிப் பற்றையும் தாய்நாட்டுப் பற்றையும் நம் இளைஞர்கள் உள்ளத்தில் ஊட்டும் தலைவர்கள் சிலருடைய வரலாறுகளை இச்சிறு நூலில் காணலாம். அவற்றைக் கற்று, அவர்களைப் போல் நாமும் உயிரினும் சிறந்த நம் தாய் மொழியைக் காத்தல் வேண்டும்.