பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


மற்றொரு சமயம் ‘பிரகலாதன்’ நாடகத்தில் சுவாமிகள் இரணியனாக நடித்தபோது, “நாராயணாய நம” என்று கூறிய பிரகலாதனை இரணியன் தன் மடியிலிருந்து கீழே தள்ளிக் கோபித்துக்கொள்ளும் காட்சியில், சுவாமிகள் பிரகலாதனாக நடித்த சிறுவனைத் தமது வலது கையால் தூக்கிக் கீழே எறிந்து கர்ஜித்தாராம். சபையிலிருந்த ஓர் அம்மையார், “ஐயோ பாவி பிள்ளையைக் கொன்னுட்டானே” என்று அலறி மூர்ச்சையுற்றுச் சாய்ந்து விட்டாராம்.

‘நள தமயந்தி’ நாடகத்தில் சுவாமிகளின் சனீசுவர பகவான் வேடம் பார்க்க மிகப் பயங்கரமாக இருக்குமாம். உடம்பெல்லாம் கறுப்பைப் பூசிக்கொண்டு அதன்மேல், எண்ணையும் தடவிப் பளபளப்பான கருநிற மேனியுடன் சுவாமிகள் மேடைக்கு வரும்போது, பயந்த சுபாவமுடையவர்கள் கண்களை மூடிக் கொள்வார்களாம்.

ஒரு நாள் சனீசுவரனாக நடித்துவிட்டு விடிய நான்கு மணிக்கு அப்படியே வேடத்தைக் கலைக்காமலேயே எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சுவாமிகள் வெளியே சற்று தொலைவிலிருந்த ஒரு கிணற்றுக்குச் சென்றாராம். கருக்கிருட்டில் கிணற்றிலிருந்து தண்ணீ ரெடுத்துக்கொண்டு எதிரே வந்த ஒரு மங்கை இவரது தோற்றத்தைக் கண்டு அந்த இடத்திலேயே மாரடைப்பினால் உயிர் துறந்தாராம்.

இவ்வாறு பல நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்பட்டு வந்ததின் விளைவாகச் சுவாமிகள் நடிப்பதைக் கைவிட்டு ஆசிரியப் பணியை மட்டும் மேற்கொண்டதாகத் தெரிகிறது.

சுவாமிகள் வேடம்பூண்டு நடிப்பதைப் பார்க்கக் கொடுத்து வைக்காவிட்டாலும், மற்றவர்களுக்குப் பயிற்சி யளிப்பதற்காக நடித்துக் காட்டுவதை நான்