பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் நாடக வரலாறு

உலகில் சிறந்துவிளங்கும் ஏனையமொழிகட்கு இல்லாச் சிறப்பு, தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. அதுவே முத்தமிழ் என்று வழங்கப்படும் மரபாகும். பிறமொழிகளிலும் இசையும் நாடகமும் பெருவாரியாக உண்டேனும் அவற்றை மும்மைப் பெயர் கொடுத்து வழங்கும் மரபில்லை. தமிழ் மொழிக்கு இப்பெயர்ச் சிறப்பு இடைக்காலத்தேதான் தோன்றிற்று எனினும் மிகப் பழங்காலந்தொட்டே தமிழில் இசையும் நாடகமும் இருந்து வந்துள்ளன.

அத்தகைய நாடகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழக் கீழ்நிலை அடைந்திருந்தது என்றே கூறல் வேண்டும். இச்சூழ்நிலையை மாற்றியமைத்த பெருமை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைச் சேர்ந்தது எனலாம். துறவியாக இருந்த அவர் ஒரு சில துறவிகளைப் போலத் தம்முடைய ஆன்ம முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்திருக்கலாம். அன்றேல் துறவுக்கோலம் மதித்துப் போற்றப்பெற்ற அற்றை நாளில் சுகமான வாழ்வை மேற்கொண்டிருக்கலாம். இவை இரண்டையும் விட்டு விட்டு மொழிக்குத் தொண்டு செய்வதன் மூலம் தம்காலத்து வாழ்ந்த மக்களுக்கும் அடிகளார் தொண்டு செய்தார் என்பது வியப்புக்குரியது.

துறவிகள் என்போர் உலகியல் விஷயங்களில் நேரிடையாக ஈடுபடுவதை, 19ஆம் நூற்றாண்டுத் தமிழகம் விரும்பியிராது. அவ்வாறு ஈடுபடுவதைத்