பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அ.ச. ஞானசம்பந்தன்



மட்டும் பயன்படுத்தினார். இங்ங்னம் எழுத்துக்கள் கோக்கப்படும் திறத்தால் செய்யுளின் ஓசை முதலியன மாற்றமடைந்து, பொருளுக்குச் சிறப்புத் தரும். இதனை ‘வண்ணம்' என்று கூறி அதனை, 'வண்ணம் தாமே நாலைந் தென்ப’ என இருபது வகைப்படுத்திக் காட்டுவர் தொல்காப்பியர் (செய்யுளியல் 213). வல்லிசை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம் என்பவற்றையே சுவாமிகள் பயன்படுத்தி இப்பாடலை யாத்துள்ளார். வண்ணம் என்பது சந்த வேறுபாடு.

இனி இதனை அடுத்து வரும் பாடல் வெறும் ஓசைச் சிறப்பு ஒன்றாலேயே பேசுபவனுடைய உணர்ச்சி, போர் செய்யத் தூண்டும் அவனுடைய மனநிலை என்பவற்றை அறிவிக்கின்றது. தான் யார் என்பதைத் தெரிவிக்குமாறு கடோத்கஜன் அபிமன்யுவைக் கேட்கிறான். ஆனால் அது பற்றிக் கவலைப்படாமல் சண்டையில் ஈடுபடும்படி அவனைத் துரண்டுகின்றான் அபிமன்யு. நம்முடன் சமாதானம் பேச வரும் ஒருவனை நெருங்க விடாமல், மேலும் அவனுடன் சண்டை செய்ய விரும்பினால் நாம் என்ன செய்வோம்? அவனை மேலும் அவமானம் அடையும்படி பேசுவோம். அவனுடைய அகங்காரத்தைக் கிளப்பி விடும் முறையில் பேசினால் உடனடியாக அவன் சினங் கொண்டு சண்டைக்கு வருவானல்லவா? அதே செயலை அபிமன்யு செய்கிறான். ஆனால் அக்காரியத்தை அவன் சொல்லும் சொற்களால் அறிவிப்பதை விட, அச்சொற்களின் ஒசையால் அறிவிக்கின்றார்.