பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

55

குட்டிக் கதைகளும் இடையிடையே புகுத்தப்படுகின்றன. இத்தகைய கதைகள் நூற்றுக்கு மேல் இந்த நாவலினிடையே இருக்கின்றன. இவ்வாறு இந்த நூலில் இணைந்துள்ள பகுதிகளையெல்லாம் தனித்தனியே எடுத்துத் தொகுத்துச் சேர்த்தால், இதிலிருந்து மூன்று நூல்களை உருவாக்கலாம். பிரதாப முதலியாரின் சரித்திரமாக அமைந்த செய்திகளை மட்டும் தொகுத்தால் ஒரு புத்தகமாகும்; மற்ற நீதிக் கதைகளையும், விநோதக் கதைகளையும், துண்டு துணுக்குகளையும் எடுத்துத் தொகுத்து நீதி விநோதக் கதைக் கதம்பமாக வெளியிடலாம். கற்பு, மகளிர் பெருமை, நியாயம் வழங்கும் முறை, அரசியல் நெறி, தமிழன் பெருமை என்பன போன்ற பொருள்களைப் பற்றிய பிரசங்கங்களையெல்லாம் தொகுத்து வேதநாயகம் பிள்ளையவர்களின் கட்டுரைத் தொகுப்பு என்றே வெளியிட்டு விடலாம். அநேகமாக இந்த மூன்றும் சமமான அளவில் இருக்குமென்றே எண்ணுகிறேன்.

இவற்றை யெல்லாம் இந்த நாவலில் வேண்டுமென்றே இணைத்திருக்கிறார் ஆசிரியர். அவர் இந்த நூலின் முகவுரையில் எழுதுகிறார்: 'தேசீயப் பண்பு, இல்வாழ்க்கை, தென்னிந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இடையிடையே நகைச்சுவை மிக்க சம்பவங்களும், சுவை மிக்க கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. உலகத்தாரிடம் பொதுவாகக் காணப்படும் பலவீனங்களும் குறைபாடுகளும் ஆங்காங்கே கேலி செய்யப்பட்டிருக்கின்றன. நான் கடவுள் பக்தியைப் புகட்டியிருக்கிறேன். குடும்பத்துக்கும் சமூகத்திற்கும் யாவரும் செய்ய வேண்டிய கடமைகளையும் வற்புறுத்தியிருக்கிறேன்' என்கிறார். வாசகர்களின் நன்மையின் பொருட்டே இவ்வாறு அமைத்திருக்கிறாராம். 'நல்வழியின் இயல்பான. சிறப்பையும், தீய வழியில்