பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் நூல்களில் பௌத்தம்


தலைவர் அவர்களே!
***சகோதரிகளே! சகோதரர்களே!

தோற்றுவாய்


இப்பொழுது உங்கள் முன்னிலையில் பேச எடுத்துக் கொண்ட பொருள் "தமிழ் நூல்களில் பௌத்தம்" என்பது. ஈண்டொரு சமயக் கணக்கனாக நின்று கடனாற்றப் புகுகின்றேனில்லை; ஓர் ஆராய்ச்சிக்காரனாக நின்றே கடனாற்றப் புகுகிறேன். விரிந்த இப்பொருள் பற்றி ஒரு மணி நேரத்துக்குள் ஒழுங்கு பெறப் பேசி முடித்தல் அரிது என்று உங்களுக்கு நான் சொல்ல வேண் டுவதில்லை. குறித்த காலத்துக்குள் எவ்வெப் பொருளைத் தொடுத்தும் விடுத்துஞ் செல்லவேண்டுமென்று எனது சிற்றறிவு உந்துகிறதோ, அவ்வழி நின்று, அவ்வப் பொருளைத் தொடுத்தும் விடுத்துஞ் செல்வேன்.

நூன் முறைப்பாடு

முதலாவது நூல்களை ஒருவாறு முறைப்படுத்தி எடுத்த பொருளுக்கு ஓர் எல்லை கோலிக்கொள்வது நலன் என்று தோன்றுகிறது.

க. தொல்காப்பியம்.
உ. பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு.
கூ. ஐம்பெருங் காப்பியம்.
ச. திருமுறைகள்.
ரு. கம்பராமாயணம்.
சு. புராணங்கள்.
எ. பிற்பட்ட நூல்கள்.

இக்கூறுபாடு காலமுறையைப் பெரும்பான்மை தழுவியும், சிறுபான்மை தழுவாமலுஞ் செய்யப்பட்ட தென்க.