பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
 
தமிழ் நூல்களில் பௌத்தம்

கணக்கனாக ஈங்கு நான் நிற்கவில்லையென்று தொடக்கத்திலேயே சொல்லி யிருக்கிறேன். 'எக்காரணம் பற்றித் திருமுறைக்காரர்கள் பௌத்தத்தைச் சாய்த்தார்கள்' என்பது போன்ற ஆராய்ச்சியில் ஈண்டு யான் நண்ணப் போவதில்லை. அக்காரணம் பலமுறை பல விடங்களில் என்னால் பேசப்பட்டிருக்கிறது; எழுதப்பட்டிருக்கிறது. எடுத்துக்கொண்ட பொருள் "தமிழ் நூல்களில் பௌத்தம்" என்பது. திருமுறைகளென்னுந் தமிழ் நூல்களில் பௌத்த தர்மம் எவ்வளவு புகுந்திருக்கிறது என்பதே நமது ஆராய்ச்சிக்குரிய பொருள். அவ்வழி நின்று பணியாற்றுவது எனது கடன்.
ஒவ்வொரு திருமுறையையும் தனித் தனியாக எடுத்துப் பேசிக்கொண்டு போகக் காலமில்லை. எனக்குக் குறிக்கப்பெற்ற காலவரையும் நெருங்கி என்னை நெருக்கப்போகிறது. இந்நிலையில் தரலிபுலாக நியாயம்பற்றி இரண்டொன்று குறிப்பதே சால்புடைத்து.
திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்த சுவாமிகள் முதலியோர் சமண பெளத்தங்களை மிக உரமாகத் தாக்கி மறுத்திருப்பது உண்மையே. ஆனால் அவர்கள் பௌத்த தர்மத்தைக் கொண்டார்களா இல்லையா எனில், 'கொண்டார்கள்' என்றே யான் விடையிருப்பேன். திருஞானசம்பந்த சுவாமிகள்,

"இன்னவுரு இன்ன நிறம்

என்றறிவ தேலரிது நீதிபலவும்

தன்னவுரு வாமென மிகுத்ததவன்

நீதியொடு தான மர்விடம்"

என்று தமது இறைவனை, "நீதிபலவும் தன்னவுருவாமென மிகுத்த தவன்" என்று போற்றி யிருக்கிறார்கள். இக்கருத்து, பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நடுநிலையில் நின்று உண்மை ஆய்வோர் எவருங் கூறுவர்.