பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
 
தமிழ் நூல்களில் பௌத்தம்

 உணர்வு தோன்றுதல் அரிது. விளக்கம், அடியேனால் எழுதப் பெற்ற "மனித வாழ்க்கையுங் காந்தியடிகளும்", "சைவத்தின் சமரசம்", "முருகன் அல்லது அழகு", "கடவுள் காட்சியும் தாயுமானாரும் " என்னும் நூல்களிற் காண்க.
சமயம் ஒன்றே. முறைகள் பல. முறைகளிற் சிற்சில வேளைகளில் மாசு படிவதுண்டு. அம்மாசைப் போக்கப் பெரியோர்கள் தோன்றுவது வழக்கம். நமது பாரத நாட்டிலும், சமயம் என்னும் உண்மை நெறிக்குரிய முறைகளில் திரிபு நேரும்போதெல்லாம், பெரியோர்கள் தோன்றித் திரிபைப் போக்கி முறைகளைச் செம்மை செய்தார்கள். அப்பெரியோருள் புத்தர் பெருமானும் ஒருவர்.
புத்தர் பெருமான் எந்தாளில் தோன்றினார்? உண்மையை உணர்த்தும் அறிவெனுங் கருவியை "வேதம்" என்னும் ஒரு நூலாகக்கொண்டும், உண்மையை விளங்கச் செய்யுந் தியாகத்துக்குரிய "யக்ஞம்" என்னும் யாகத்தைக் கொலைக்குழியாக்கியும், பிறப்பில் சகோதரர்களாகத் தோன்றிய மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தும், உண்மைக்கு மாறுபட்ட இழிவுகள் இன்னோரன்ன பல நிகழ்த்தியுஞ் சமயத்துறைகட்குச் சிலர் சூழ்ந்த கேட்டால், மன்பதை இருளில் மூழ்கி இடுக்கணுற்ற வேளையில், புத்தரென்னும் பெருஞாயிறு தோன்றிற்று. அஞ்ஞாயிறு, அக்கால தேச வர்த்தமானத்துக்கேற்ற வழியில், அறமுறைகள் கோலி, உண்மைமீது படர்ந்திருந்த பனிப்படலத்தை நீக்கிற்று. சுருங்கக்கூறின், "சீலம் என்பதன் வழிப் புத்தர் உலகைச் செம்மை செய்தார் என்று கூறலாம். அந்நாளில் சீலம் மறக்கப்பட்டமையான், சீலம் வலியுறுத்தப்பட்டது.
"பௌத்தம்" பூதவாதமென்று சிலவிடங்களில் கருதப்படுகிறது. அது தவறு. பௌத்த நூல்களில் ஏதாவதொன்றைச் சிறிது பார்த்தவரும் இங்ஙனங் கூறார். இது குறித்து நூலினுள் சில உரை பகர்ந்துளேன்.
புத்தர், கடவுளைப்பற்றி ஒன்றுங் கூறாமையான், அவரை நாத்திகரெனச் சிலர் கருதுகிறார். புத்தர், அறமெனுங் கடவுளைச் சீலமெனும் வழிநின்று உணருமாறு அறி