உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

137

கட்டு, பிள்ளையார் முன்வெளியிடம் ஆம் இடங்களிலும் வகுப்புகள் நடைபெற்றதுண்டு. இயிைடையே சில வாடகை யிடங்களிலும் இடங்களிலும் நடந்ததுண்டு. அதை நடத்தத் தகுந்த இடம் பெறுமளவும் அங்ஙனம் நடந்தது. பெருமுயற்சியுடன் மடாலயத்திற்கெதிரிலேயே இடம் அமைக்கப் பெற்றபின், ஆங்குக் கொட்டகையமைத்துப் பள்ளியை நடத்தினார்கள். மடாலயத்திற்குச் சொந்தமான இடத்தையும் பள்ளிக்கென விட்டார்கள், சுவாமிகள் தம் மடாலயத்தருகிலேயே அப்பள்ளி நடைபெற்றதாதலால், சுவாமிகள் அவ்வப்போது நேரிற்சென்று மாணவர்களைப் பரிசோதித்தலும், ஆசிரியர்கள் தக்கவாறு பயிற்சி தருகிறார்களா என்பதையும் கவனிப்பார்கள். நாள்தோறும் ஆறு மணி நேரம் பள்ளி நடைபெறும். காலை 9 மணி முதல் 12 மணி வரை பிற்பகல் 2 முதல் 5 மணிவரை பள்ளி நடைபெறும்.

பாடசாலையை அரசியலார் அங்கீகாரத்திற் குள்ளாக்க வேண்டுமெனச் சுவாமிகள் ஏற்பாடு செய்தார்கள். அதனையறிந்த வேறொரு கிருத்துவப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்புதல் அளிக்கக் கூடாதென முன்னின்றார். அப்பள்ளியிற் பயில்வோர் பெரும்பாலோர் செல்வர் வீட்டுப் பிள்ளைகள். இங்கு பயில்வார் யாவரும் ஏழைகளே. ஒரு சில வசதியுள்ள வீட்டுப் பிள்ளைகளும் படித்தார்கள். ஏழைகள் முன்னேற வொட்டாமற் செய்வதுதானே செல்வர் இயல்பு ஏழைகளுக் கெனவே அமைக்கப்பெற்ற பள்ளி அங்கீகாரம் பெறுமாயின் செல்வர்க்கு ஏவல் செய்யும் ஏழைகள் கிடைக்க மாட்டார்களே! ‘மனிதர் உணவை, மனிதர் பறிக்கும் வழக்கம்; மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை' என்றெல்லாம் பாரதி இவை போன்ற இழிந்த உள்ளங்களைக் கண்டு கொள்ளாமலா பாடிவிட்டார்? உண்மை உண்மை! முக்காலும் உண்மை எனினும் தளர்ச்சி கொள்ளாமல் பாடசாலையை நடத்துமாறு கவனித்துக் கொண்டார்கள் நம் அடிகளார்.

நீதிபதி டி. சதாசிவ ஐயர் குமாரரான திரு. கிருஷ்ண மூர்த்தி அய்யர், மாவட்டக் கல்வியலுவலராக மாற்றம் பெற்று இங்கு வந்தார். அவர் முதன் முதலாகச் செய்த வேலை ‘ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையை அங்கீகரித்ததேயாகும். அவரைப் பாராட்டிச் சுவாமிகள் வாழ்த்துக் கூறியருளினார்கள். எதிர்பாராமல் செய்த இந்தப் பணியினைக் குறித்துச் சுவாமிகள் பல சமயங்களில் பாராட்டுவதுண்டு.