தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
191
‘கல்கி' ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தியவர்கள் வெளியிட்டது.
சைவ சித்தாந்தமும், ஞானியார் சுவாமிகளும்
சில நாளைக்கு முன்பு நான் ஒரு சைவ சித்தாந்தியின் பிரசங்கம் கேட்டேன். பிரசங்கி, சர்க்கார் உத்தியோகம் பார்த்துப் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் பெரியார். அவர் சைவ சித்தாந்தத்தின் அருமை பெருமைகளை விஸ்தாரமாக விவரித்தார். உலகத்தில் வேறு எந்த சமயமும் சைவ சமயத்துக்கு ஈடாகாதென்று விவாதித்தார். கடைசியில் ஆவேசம் வந்தவரைப்போல் “ஆகா இப்பேர்ப்பட்ட சைவ சித்தாந்தத்தை அந்த அடால்ப் ஹிட்லருக்கு யாரும் எடுத்துப் போதிப்பாரில்லையே? ஹிட்லர் மட்டும் சைவ சித்தாந்தத்தை அறிந்து கொண்டாரானால் இப்பேர்ப்பட்ட விபரீதமான காரியங்களைச் செய்வாரா? உலகத்தை யுத்தத்தில் ஆழ்த்து வாரா? அந்தோ பரிதாபம் என்று கதறினார். இதைக் கேட்ட சபையோரில் சிலர் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தார்கள்.
ஆனால், எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவருக்கு மட்டும் பிரசங்கி சொன்னது பிடிக்கவில்லயென்று தோன்றிற்று, “ஆமாம், ஆமாம், ஹிட்லருக்குச் சைவ சித்தாந்தத்தைப் போதித்துவிட்டால் ரொம்ப நல்லதுதான். அவருடைய விரோதிகளைப்பீரங்கி வாயில் வைத்துச் சுடுவதற்குப் பதிலாகக் கழுவிலேற்றிக் கொன்றுவிடுவார் செலவு குறைச்சல்“ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார். (சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்ற கதையை நினைத்துக்கொண்டுதான் அவர்அப்படி முணுமுணுத்திருக்க வேண்டும்.)
எனக்கு அந்தசமயம் என்ன தோன்றிற்து என்பதையும் சொல்லிவிடுகிறேன். “ஆகா இந்த உலகத்திலே கடவுள் என்னென்ன அக்கிரமங்களையெல்லாம் வைத்திருக்கிறார்? எப்பேர்ப்பட்ட மூர்க்கர்களையும் மூடாத்மாக்களையும் படைத்திருக்கிறார்? எவ்வளவு பாவங்களையும், தீமைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்? அந்தோ அந்தக் கடவுளுக்கு மட்டும் சைவ சித்தாந்தத்தை யாராவது போதித்து விட்டால், இந்தமாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகில் நடக்குமா? ஐயோ! கடவுளுக்குச் சைவ சித்தாந்தத்தைப் புகட்டுவதற்காக இந்த சைவப் பிரசங்கியை உடனே கடவுள் பால் அனுப்பினால்