பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தமிழ் வளர்த்த நகரங்கள்

     “ஓங்கல் இடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி
      ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்
      மின்னேர் தனியாழி வெங்கதிர்ஒன்(று) ஏனைய
      தன்னேர் இலாத தமிழ்.”

என்பது அப் புலவரின் பாடல்.

தமிழின் தொன்மை

இம்மொழி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றி மூத்த பழங்குடியினரால் பேசப்படும் பெருமை வாய்ந்தது. படைப்புக் காலங் தொட்டு மேம்பட்டு வந்த முடிமன்னர் மூவரால் பேணி வளர்க்கப்பெற்றது. எல்லையறு பரம்பொருள், பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும், தான் முன் இருந்தபடியே என்றும் யாதொரு மாறுபாடுமின்றி இருந்து வருகிறது. அஃதேபோல் நந்தம் செந்தமிழும் எந்த மாறுபாடுமின்றி என்றும் கன்னிமையோடு நின்று நிலவுகின்றது.

தமிழின் சீரிளமைத்திறம்

தாய்மொழியாகிய இத்தமிழிலிருந்து கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் சேய் மொழிகளாகத் தோன்றியுள்ளன. பல சேய்களே ஈன்றும் தாய்த்தமிழ் இளமைகெட்டு முதுமையுற்று வளமையற்றுப் போகவில்லை. இதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்பெறும் உயர்தனிச் செம்மொழிகளாகிய வடமொழி, எபிரேயம், இலத்தீன் ஆகியவற்றைப் போன்று உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்துபோகவில்லை. என்றும் மாறாத சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்ற இம்மொழி. இவ்வுண்மையைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை,