பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழ் வளர்த்த நகரங்கள்


என்ற திருக்குறளே நினைவூட்டினர். ‘அரசே! நீவிர் எத்துணைச் செல்வம் படைத்திருந்தும் குறித்த காலத்தில் உணவுகொள்வதற்கு வாய்ப்பில்லேயே’ என்று வருந்தியுரைத்தார். அதுகேட்ட நாயக்கர், “அடிகளே! தாம் குறித்த பாடல் எந்நூற்கண் உள்ளது?” என்று வினவினர். உடனே குமரகுருபரர் திருவள்ளுவர் அருளிய பொதுமறையாகிய திருக்குறளில் உள்ளது அப்பாடல் என்றுகூறி, அந் நூலின் மாண்பையும் விளக்கினார். ‘ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங் குறட்பாக்களையும் நோக்கியுணர்வதற்கு எளியேற்குக் காலங்கிடையாது. ஆதலின் அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுருக்கமாகத் தொகுத்துச் சிறு நூலாக இயற்றித் தந்தருளவேண்டும்’ என்று மன்னர் அடிகளாரை வேண்டிக்கொண்டார். அங்ஙனமே திருக்குறட் கருத்துக்களைச் சுருக்கி ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் சின்னூலாக ஒரே நாளில் உருவாக்கிக் கொடுத்தார். இதனைத் திருக்குறளாகிய தாய் உரிய காலத்தில் கருவுற்றுப் பயந்த ‘குட்டித் திருக்குறள்’ என்று அறிஞர் கொண்டாடுவர்.

குமரகுருபரரின் புலமைத் திறத்தையும் அருளாற்றலையும் கண்டு வியந்த திருமலை நாயக்கர் ஆண்டொன்றுக்குப் பதினாயிரம் பொன் வருவாயுடைய அரிய நாயகபுரத்தை அவருக்குப் பரிசாக வழங்கிப் பாராட்டினர். அச் செல்வமே இன்று காசிமாநகரில் குமார சாமி மடமாகவும் திருப்பனந்தாள் ஆதீனமாகவும் திகழ்ந்து அறப்பணிகளுக்குச் சிறப்பாக உதவி வருகிறது.

மேலும், இவ் அருட்கவிஞர் மதுரையில் வாழ்ந்த நாளில் மதுரைக் கலம்பகம், மீனாட்சியம்மை குறம்