பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை

மக்கள் உயர்வுக்குத் தக்க துணைபுரிவன அறிவும் ஒழுக்கமுமே. எல்லோருக்கும் தாய்மொழி யறிவே இன்றியமையாதது. இறையுணர்வைப் பெருக்கும் சமய அறிவே ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வளர்க்கும். அறிவும் பண்பாடும் மக்களிடையே தரத்தால் குறைந்துவரும் இந்நாளில், அவற்றை மாணவரிடையே தரமுடையனவாகத் தழைக்கச்செய்யும் வழிதுறைகளை நினைவூட்டிக் காக்க வேண்டுவது கல்வித்துறையினரின் தலையாய கடமையாகும.

இத்தகைய கடமையுணர்வுடன் தமிழாகிய தாய்மொழி யறிவையும் சமயப் பண்பாட்டையும் வளர்க்கும் மூன்று நகரங்களைப்பற்றிய சிறப்பான செய்திகள் இந்நூலில் விளக்கமாகத் தரப்படுகின்றன. தமிழகத்தின் தொன்மையான நகரங்களாகிய மதுரை, நெல்லை, தில்லை என்ற மூன்றும் தமிழ் வளர்த்த வரலாற்றை விளக்கும் இந்நூல் ‘தமிழ் வளர்த்த நகரங்கள்’ என்னும் பெயரால் வெளி வருகின்றது. தமிழுலகம் எனக்குச் சில்லாண்டுகளாகத் தந்துவரும் பேரூக்கத்தாலேயே இந்நூலையும் உருவாக்கினேன். என்னை இடையறாது இப் பணியில் ஊக்கிவரும் உயர்ந்த நோக்கினராகிய சைவசித்தாந்தக் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையாப் பிள்ளையவர்கட்கு யான் பெரிதும் கடப்பாடுடையேன்.

இதனைக் கண்ணுறும் கலாசாலைத் தலைவர்களும் கன்னித்தமிழ்ப் பணியாற்றும் புலவர் பெருமக்களும் இக் நூலைத் தத்தம் கலாசாலைகளில் பாடமாக்கி எளியேனை இத்துறையில் ஊக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

தமிழ் வெல்க !
அ. க. நவநீதகிருட்டிணன்