பக்கம்:தமிழ் விருந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கற்பனையும் 11 மாந்தர்க்கு இன்பம் தருவனவாகும். தமிழ் நாட்டார்க்குச் சிறப்பாக மலர்களில் மிகுந்த விருப்பம் இருந்ததாகத் தெரிகின்றது. பூக்களில் தலைமை வாய்ந்தது, தாமரை. இப் பூவைப் பாடாத கவிஞர் இல்லை. தண்ணீர் நிறைந்த குளம் முதலிய இடங்களில் தாமரை காணப்படும். தாமரையால் அழகு பெற்ற குளங்களின் கோலத்தைக் காவியங்களிற் காணலாம். காலைப் பொழுதில் தாமரை மலரும்; மாலைப் பொழுதிற் குவியும். இவ் வியற்கைக் காட்சியால் விளைந்த கற்பனைகள் பலவாகும். காலையில் கதிரவன் தோன்றும் பொழுது தாமரை இதழ் விரிந்து இன்புறுகின்றது. மாலையில் கதிரவன் மறையும் பொழுது இதழ் குவிந்து ஒடுங்குகின்றது. ஆதலால், 'கதிரவன் காதலன் தாமரை காதலி' என்று கவிஞர் கற்பனை செய்வாராயினர். இக் கற்பனையின் பயனாகத் தாமரைநாயகன் என்னும் பெயர் சூரியனுக்கு அமைந்தது. இன்னும், பூவின் பல பருவங்களைத் தமிழ் நூல்களிற் காணலாம். அரும்பு, முதற் பருவம்; முகை, அடுத்த பருவம்; போது, அதற்கடுத்த பருவம் போது விரிந்த நிலையில் மலராகும். இந்நான்கு பருவங்களில் மூன்றைத் திருவள்ளுவர் ஒரு பாட்டிலே குறித்துள்ளார். "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்" என்ற குறளில் அரும்பு, போது, மலர் என்னும் மூன்று பருவங்கள் முறையாகக் குறிக்கப்பட்டுள்ளன. மென்மையும் அழகும் வாய்ந்த பூவிற்கு நிகராகப் பெண்களைக் கருதினர் தமிழ்நாட்டுக் கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/13&oldid=878372" இலிருந்து மீள்விக்கப்பட்டது