பக்கம்:தமிழ் விருந்து.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தமிழ் விருந்து என்று அமைச்சனை நோக்கி இறுமாந்து பேசினான் அப்பொழுது, அரசன் ஆராய்ந்து அறியாமல் சினம் தலைக்கொண்டு அறிவு கலங்கினான் என்பதை அமைச்சன் நன்கு உணர்ந்தான்; தன் கருத்தை எடுத்துரைத்தலே கடமை என்று கருதினான்; மன்னன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், எழுந்து நின்று பதறாமல் சிதறாமல் பேசத் தொடங்கினான் : "அரசர் சீறுவ ரேனும் அடியவர் உரைசெ யாதொழி யார்கள் உறுதியே” என்று தொடங்கி, சோழர் படையை வெல்ல முடியாதென்று தக்க காரணம் காட்டி நிறுவினான் : " இன்று சீறினும் நாளை அச் சேனைமுன் நின்ற போதினில் என்னை நினைத்தியால் ” என்றும் அழுத்தமாக உரைத்தான். இம்மொழிகளைக் கேட்ட அரசன் அளவிறந்த சீற்றமுற்றான்; அமைச்சனை இகழ்ந்தான் : " என்னுடைய தோள்வலியும் என்னுடைய வாள்வலியும் யாதுமறி யாது பிறர்போல் நின்னுடைய பேதைமையி னால்உரைசெய் தாய்.இது நினைப்பளவில் வெல்ல அரிதோ” என்று மந்திரியின் சொல்லை உதறியெறிந்து போர் தொடுத்தான். கலிங்கத்துப் படை காற்றிலகப்பட்ட பஞ்சுபோல் சிதறிப் பறந்தது. சிற்றரசன் சீரும் சிறப்பும் இழந்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.