பக்கம்:தமிழ் விருந்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழ் விருந்து வாளைக் கையிலே எடுத்தாள் "என் மகன் போர்க் களத்தில் புறங்காட்டி ஓடினான் என்பது உண்மை யானால், அப் பேடிக்குப் பாலூட்டிய மார்பை இவ் வாளால் அறுப்பேன்" என்று வஞ்சினம் கூறிப் போர்க் களம் புகுந்தாள். அங்கே பிணங்களிடையே நடந்து சென்று தன் மகனது உடலைக் கண்டாள் முகத்திலும் மார்பிலும் அடியுண்டு சிதைந்து கிடந்த அவ் வுடலைக் கண்ட நிலையில் அவனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் பெரியதோர் இன்பம் உற்றாள். இனி, மற்றொரு போர்க்களத்தைக் காண்போம். கலிங்கம் என்னும் நாட்டின்மீது கருணாகரத் தொண்டைமான் படையெடுத்தான். ஆண்மை நிறைந்த வீரர்கள் அணியணியாகத் திரண்டு எழுந்தார்கள். போர்ப்பறை கேட்டுப் பொங்கி எழுந்த வீரன் ஒருவன், போர்க்கோலம் புனைந்து, தன் காதல் மனையாளிடம் விடைபெறச் சென்றான். வீரக்கோலத்தில் தன் கணவனைக் கண்ட மங்கை அவ் வழகைக் கண்ணால் பருகிக் களிப்புற்றாள், தலைவனது பரந்த மார்பினைப் பார்த்தாள், நிமிர்ந்த தோள்களை நோக்கினாள்; அத் தோளில் அமைந்த வாளின் ஒளியைக் கண்டாள்; அளவிறந்த இன்பமும் பெருமையும் அடைந்து வீரக் கணவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். போர்க்களம் போந்த காதலன் மாற்றாரை வென்று விரைவில் வருவான் என்று அவன் சென்ற வழிமேல் விழிவைத்துக் காதலி காத்திருந்தாள். வீரன் மீண்டு வருவதாகக் குறித்திருந்த நாளில் வரவில்லை. மேல் ஒரு நாள் சென்றது. சில நாள் சென்றன. மனத்துயரம் பொறுக்கமாட்டாத மங்கை போர்க்களத்தை நோக்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/26&oldid=878464" இலிருந்து மீள்விக்கப்பட்டது