பக்கம்:தமிழ் விருந்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் விருந்து இனி மனிதர்க்குரிய குணங்களிற் சிறந்தது பொறுமை என்பர். 'உள்ளம் கவர்ந்து எழுந்து ஒங்கும் சினத்தைக் காத்துக்கொள்ளும் குணமே குணம்' என்றார் ஒரு கவிஞர். வெம்மை விளைப்பது கோபம்; செம்மை விளைவிப்பது பொறுமை. இத் தகைய பொறுமை மன உறுதியாலே வரும். பொறுமையின் தன்மையைத் தம் வாழ்க்கையிலே பொருந்தக் காட்டினார் ஏசுநாதர். தீயவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சீறினார்கள் கழியால் அடித்தார்கள்; காறியுமிழ்ந்தார்கள் முள்முடியைத் தலையிலே வைத்து அழுத்தினார்கள், கையிலே நெடுஞ்சிலுவையைக் கொடுத்து வீதியின் வழியாக நடத்திச் சென்றார்கள். ஏசுநாதர் திருமுகம் சோர்ந்தது; நாவுலர்ந்தது; கண் குழிந்தது. இத்தகைய இளைத்த மேனியில் கயவர்கள் இருப்பாணியை அறைந்தார்கள். அப் பெருந் துயரத்தைப் பொறுத்தார் ஏசுநாதர், சிலுவையில் அறைந்து துன்புறுத்தியவர் மீது இரக்கமும் கொண்டார்; இறைவனை நோக்கி, 'எந்தையே இவர் அறியாமல் செய்கின்றார்கள். இவர் பிழையை மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். இத்தகைய இரும் பொறையையும், பெருங் கருணையையும் அழகாகப் பாடினார், கிறிஸ்தவக் கம்பர் என்று புகழப்படுகின்ற கிருஷ்ணபிள்ளை. - "தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்துளந்தாய் இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை மன்னியும்என்று எழிற்கணிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/38&oldid=878488" இலிருந்து மீள்விக்கப்பட்டது