பக்கம்:தமிழ் விருந்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 - தமிழ் விருந்து என்று மனம் உடைந்து வினவினான். இன்னும் அடுக் கடுக்காக அலைகள் வருவதையும், கரையில் விழுந்து புரண்டு போவதையும் கண்டு மனம் புழுங்கினான் நளன். கருங்கடலின் நிலையும் தன் மனநிலையை ஒத்திருப்பதாகக் கருதி வருந்தினான். "போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி தாவாய் குழற நடுங்குறுவாய்-தீவாய் அரவகற்றும் என்போல ஆர்கலியே மாதை இரவகற்றி வந்தாய்கொல் இன்று" என்று அலைகடலை நோக்கி அழுதான். "என்னைப் போல் கருங்கடலே ! நீயும் உன் காதலியை நள்ளிரவிற் பிரிந்தாயோ " என நளன் புலம்பும் மொழிகளில் சோகம் பொங்குகின்றது. இவ்வாறு கடற்கரை வழியாகச் சென்ற நளன் அயோத்தி நகரை அடைந்தான்; ஊரும் பேரும் சொல்லாது அங்கு அரசு புரிந்த மன்னனிடம் தேர்ப்பாகனாக அமர்ந்தான். சில காலம் சென்றது; நளன் இருப்பிடத்தை ஒற்றர் மூலமாக அறிந்தான் தமயந்தியின் தந்தை, அவனைத் தன் மாளிகைக்கு அழைப்பதற்கு ஒரு சூழ்ச்சி செய்தான்; தமயந்தியின் இரண்டாம் சுயம்வரம் என்று அயோத்தி மன்னனுக்கு அறிவித்தான்; உடனே புறப்பட்டான் அவ் வரசன், தேர்ப் பாகன் கொண்டுவந்த தேர்மீது ஏறினான்: விதர்ப்ப நாட்டு மாளிகைக்குச் சென்றான். தேர்ப் பாகனாக வந்தவன் நளன்தானா என்று நன்றாகத் தெரிந்து கொள்ளுமாறு தன் மக்களை அவனிருந்த இடத்திற்கு அனுப்பினாள் தமயந்தி. குழந்தைகளைக் கண்டான் நளன். காதலால் இவனுள்ளம் கரைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/68&oldid=878553" இலிருந்து மீள்விக்கப்பட்டது