பக்கம்:தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிப்பிராயங்கள்‌.

இவ்வொன்ப துரைகளினும், இறுதியிலெழுந்ததும் திருவள்ளுவரது உள்ளக்கிடக்கைகளை வெள்ளிடை மலைபோல விளக்கி நிற்பதுமாய் இன்றுவரை நின்று நிலவுவது ஆசிரியர் பரிமேலழகர் அருளிய உரையேயென்பது அறிஞர்க்கெல்லாம் ஒத்தது. திருவள்ளுவர்க்கு ஆசிரியர் பரிமேலழகர் இயற்றியவுரையானது தமிழ்ப்பாஷையையே அலங்கரிக்கின்ற அற்புதம் வாய்ந்ததாயினும், தமிழ்மொழியிற் சீரிய பயிற்சியும் கூரிய அறிவும் உடையார்க்கன்றி ஏனையோர்க்கு அத்துணைப் பபன்றருவது அருமையாம். அதனால் திருக்குறட் பொருள் நுட்பங்களைக் கற்றாரே அன்றி மற்றாரும் அறிந்துகொள்ளக்கூடாமற் போகின்றது.

இக்காலத்து அறிஞர்கள் சிலர் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களால் ஒருவித நன்மையே உண்டாயிருப்பினும் தமிழறிவு மிகவும் சுருங்கிவரும் இக்காலத்தே தமிழினருமை பெருமைகளை எளிதின் உணர்த்துதற்குரிய சிறந்த வழியாவது தமிழ்நூல்களிற் பொதிந்த பொருணுட்பங்களை இனிய எளிய வசனநடையில் விரித்தெழுதிப் பிரசுரிப்பதேயாகும். அதினும் திருக்குறள்போன்ற அரும்பெறநூல்களை அங்ஙனம் எளிதாக்கி வெளியிடுதல் இன்றியமையாததன்றோ?

இதனை யுள்ளபடியுணர்ந்த சேற்றூர்ச் சம்ஸ்தான வித்துவானும் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவருளொருவருமாகிய ஸ்ரீமத் மு.ரா.அருணாசலக்கவிராயரவர்கள் திருவள்ளுவர் பரிமேலழகர் உரைக் கருத்துக்களை வசனநடையிலெழுதிப் பிரசுரித்த நூலின் பிரதியொன்று அவர்களால் சமீபத்திற் கிடைக்கப்பெற்று மகிழ்வுற்றேன். இவர்கள் திருவள்ளுவர் குறள்களைப் பரிமேலழகருரை யோடும் தெளிய ஆராய்ந்து அவற்றிற்கண்ட பொருணுட்பங்களை னிய தமிழ் நடையில் யாவருமறிந்துகொள்ளுமாறு விளக்கியிருக் கின்றார்கள். இவர்கள் வசன நூல் திருக்குறள் அதிகாரப்படியே அமைந்து பரிமேலழகர் கொண்ட முறையே பாடல்களை அவதாரிகைகளுடன் விளக்கிச் செல்கின்றது. நுணுகி ஆராய்ச்சி செய்யத் தக்க பரிமேலழகர் உரை நுட்பங்களைக் கவிராயரவர்கள் பேராராய்ச்சி காட்டி உரைக்குரைபோலவே விளக்கிக் காட்டுதலால் திருக்-