உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

சொல்லமுடியுமா! ஏழை சொல் அம்பலம் ஏறுமா!! எனக்கும் புரிகிறது உனக்கும் தெரிகிறது, காங்கிரஸ் அரசியல்—தேர்தல் காரியம்—எப்படி நடத்தப்பட்டு வருகிறது என்று. ஆனால், முதலாளிகளிடம் பணம் வாங்காதே! பெர்மிட் கோட்டா லைசென்சு வழங்கும் அதிகாரத்தை விட்டுவிடு! என்று சொன்னால், கேட்பார்களா!! நான் அல்ல தம்பி! இத்தகைய யோசனைகளைத் துணிந்து கூறியது. இந்தியாவின் பிரதம நீதிபதியாக இருந்தவர், மேகர்சந்த் மகாஜன் என்பவர் கூறியுள்ளது அது. நேர்மை உணர்ச்சியுடன் அஞ்சாமையும் இணைந்திருப்பவர்கள் மட்டுமே, ஆளவந்தார்கள் புருவத்தை நெரித்து, முணுமுணுத்து, பழிவாங்கத் திட்டமிடக்கூடும் என்று தெரிந்திருந்தும், உண்மையை உரைத்திடுவோம். ஊராள்வோர் கோபித்தால் கோபித்துக்கொண்டு போகட்டும், ஊரார் உண்மை நிலைமையை உணர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே இது போலப் பேச முடியும்.

இலஞ்ச ஊழலுக்கு மூலகாரணமே உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள கொடுக்கல்—வாங்கலே, எல்லாவித ஊழலையும் உற்பத்தி செய்கிறது.

இவ்விதம் துணிந்து, உண்மையைச் சொன்னவர், மகாஜன்.

நம் அனைவருக்கும் தெரிந்ததைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்; ஆனால், நாம் சொல்லும்போது கட்சிமாச்சரியத்தால் பேசுகிறோம் என்று பொதுமக்கள் எண்ணிக்கொள்ளக்கூடும்; அல்லது பொதுமக்களிடம் ஆளவந்தார்கள் அதுபோலச் சொல்லிவிடக் கூடும்.

மகாஜன் ஒரு கட்சிக்காரர் அல்ல, அரசியல்வாதி அல்ல; காங்கிரஸ் அமைச்சர்கள்பற்றிக் கண்டித்துப் பேசி, அதன் மூலம் ‘பெயர்’ பெற்று, ஓட்டுவேட்டை ஆட நினைக்கிறவர் அல்ல. நாடு சீர்ப்பட, நிர்வாகம் தூய்மைப்பட, என்ன செய்தாக வேண்டும் என்பது பற்றி ஆர அமர எண்ணிப்பார்த்து, விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் இருந்து பிரச்சினையை அலசிப்பார்த்து, இதனைக் கூறுகிறார். பொறுப்புமிக்க இடத்தில் இருந்தவர், பொச்சரிப்புக்கொண்ட பதவி தேடி அல்ல.