98
பெரியதோர் சுமை, இதனைத் தாங்கிட நம்மால் ஆகாது என்று ஒதுங்கி விடாமல், ஒண்டிக்கட்டையுமாகி விடாமல் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடலு அதனை நடத்தி வருபவர். எனவே, அவருக்கு, ஏழை, நடுத்தரவகுப்பினர் ஆகியோரின் இன்னல்கள் பற்றி நன்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது. எனவே, “அண்ணா! எமக்கு உணவு, உடை இவைகளேனும் கிடைத்திடச் செய்திடுவீர்! என்று அந்தத் தாய்மார்கள் கேட்டு நின்றது கண்ட போது அவருடைய கண்களில் நீர் துளித்திருக்கும்,
மாடுமனை கேட்கவில்லை.
ஆடை அணி கேட்கவில்லை.
ஆடம்பரப் பொருள் கேட்கவில்லை.
உணவு—உடை—குடும்பம் நடாத்திச் செல்ல வழி, இவைகளையே கேட்டனர் அந்த மாதர்கள்.
அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில்—நாலாவது ஐந்தாண்டுத் திட்டம்—இருபத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள் சர்க்கார்—நாட்டை வளப்படுத்த. செல்வம் கொழித்திடும் நிலை காண! தெரியுமா, தம்பி ! 22,000 கோடி ரூபாய.
இந்த நிலையின்போ அந்தத் தாய்மார்கள் கேட்டிருப்பது, உணவு, உடை இவையே, என்ன அதன் பொருள்? ஆண்டு பதினேழு ஆகியும், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைக் காட்டிய பிறகும், எல்லோருக்கும் உணவு கிடைத்துவிட்டது, உடை இருக்கிறது, உறையுள் இருக்கிறது என்று கூறிடத்தக்க நிலை, நாட்டிலே இல்லை. இதனை மறந்த ஒரு தலைவர் இருக்கிறார். அவர் அரசோச்சும் நிலைபெற்றும் இருக்கிறார், அவரிடம் சென்று முறையிடுவோம் என்று தோன்றிற்று அந்தத் தாய்மார்களுக்கு என்பதன்றோ பொருள்.
பாலுந்தேனும் கலந்தோடும்! சுயராஜ்யம் சுகராஜ்யமாக இருக்கும்! தனியொருவனுக்கு உணவில்லை எனும் முறை ஒழிந்திடும்! என்றெல்லாம் காங்கிரசார் எழுப்பிய முழக்கமதைச் செவிமடுத்திருப்பாரன்றோ, இந்தத் தாய்மார்கள். அஃதேபோல் நடந்திடும், நாடு சீர்படும், வாழ்வு வளம்பெறும், என்று எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். அவசரப்படேல்! என்றனர், ஆமென்றனர் தாய்மார்கள்.