உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

நிலச்சீர்திருத்தச் சட்டத்தையே, எடுத்துக்காட்டாகக் கொண்டு, நான் கூறியிருப்பது எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

நிலச் சீர்திருத்தச் சட்டம் என்பது, தம்பி! சமதர்மப் பொருளாதாரத் திட்டத்துக்கு அடிப்படையாக அமைவது. ஆயினும், காங்கிரஸ் அரசு இந்தச் சட்டத்தை, சமதர்மப் பொருளாதார அடிப்படை என்று கூறிடக்கூட அச்சப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அச்சத்திற்குக் காரணமும் இல்லாமற் போகவில்லை. பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு அதிபர்களான பட்டக்காரர்கள், பாளையக்காரர்கள், இராமநாதபுரம் ராஜா, செட்டி நாட்டு ராஜா, வாண்டையார், வலிவலத்தார், நெடும்பலத்தார், மூப்பனார், செய்யூரார், சூணாம்பேட்டையார், இலஞ்சியார், சங்கரண்டாம் பாளையத்தார், கடவூரார், காட்டுப்புத்தூரார், ஒரக்காட்டார், பாண்டேசுரத்தார், வேட்டவலத்தார் எனும் இன்னோரன்ன பிற நிலப் பிரபுக்களைக் காங்கிரசில் நடுநாயகங்களாக வைத்துக் கொண்டு, சமதர்ம அடிப்படையான நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வருகிறோம் என்று கூற எப்படித் துணிவு பிறந்திட முடியும்? நெடுங்காலம் நிலச் சீர் திருத்தத்தை, நடைமுறைக்கு ஏற்றதல்ல, தேவையற்றது, பலன் கிடைக்காது என்று கூறி எதிர்த்து வந்தனர் நிலப் பிரபுக்களின் மனம் மகிழ. ஆனால், எதிர்க் கட்சிகள், இந்தப் பிரச்சினையை வைத்துக்கொண்டு வளரவும் கிளர்ச்சி நடத்தவும் முற்படக் கண்டு, மக்களை இனியும் அடக்கி வைத்திருக்க முடியாது என உணர்ந்து, நிலப் பிரபுக்களிடம் நிலைமைகளை எடுத்துக் காட்டி. இன்னின்ன முறைகளால், நீங்கள் உமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம், அதற்கெல்லாம் இடம் வைத்துச் சட்டம் இயற்றி விடுகிறோம் என்று கூறிச் சம்மதம் பெற்று, உச்ச வரம்புச் சட்டம் இயற்றப்பட்டது.

தம்பி! உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கம், ஆட்சியிலிருந்த காங்கிரசை மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளரும் நிலை கண்டு, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது; உள்ளூரச் சமதர்ம நோக்கம் கொண்டு அல்ல.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது, இன்று ‘ஜனநாயக சோஷியலிசம்’ பேசும் இதே காமராஜர், நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு, நிலச் சீர்திருத்தத்தையே எதிர்த்துப் பேசியது.