119
சட்டத்தைச் செம்மையான முறையில் செயல் படுத்தவில்லை.
செம்மையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வமே இல்லை.
அவ்விதமான சட்டம் ஒன்று இருக்கிறது என்ற நினைப்பே அற்றவர்களாக அதிகாரிகள் உள்ளனர்.இவ்விதம் அந்த ஆய்வாளர்கள் கூறிவிட்டனர். சட்டம் செய்துவிட்டோம், நாங்கள் சமதர்மிகள் அல்லவோ! என்று காங்கிரஸ் அரசினர் கூறுவதும், சட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்டோம், நாங்கள் மட்டும் என்ன, சமதர்மிகள் அல்லவா!! என்று நிலப்பிரபுக்கள் பேசுவதும், சமதர்மம் பூத்துவிட்டது, அதன் மணம் என் நாசியிலே புகுந்துவிட்டது, ஓடோடிச் சென்று அந்த மலரினைப் பறித்துச் சூடிக்கொள்வேன், ஆடுவேன், பாடுவேன், எவரேனும் ஏனென்று கேட்டால் சாடுவேன் என்று கூறிச் சிலர் காங்கிரசுக்குள் ஓடுவதும் இப்போது புரிகிறதல்லவா?
தம்பி! இப்போதும் நாட்டிலே உள்ள மொத்த நிலத்தில் பாதி அளவு, நூற்றுக்குப் பத்துப்பேர் என்று சொல்லக்கூடியவர்களான பிரபுக்களிடம்தான். இது நான் தயாரித்த கணக்கு அல்ல; ஆய்வாளர்கள் அளித்தது. சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ள குட்டிக் குபேரர்களிடம் மொத்த நிலத்திலே ஐந்திலே ஒரு பாகம் சிக்கிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலை, ஜமீன்களை ஒழித்துவிட்டோம், நிலத்துக்கு உச்சவரம்பு கட்டிவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளப் பயன்படும் சட்டங்கள் இயற்றிய பிறகு!!
இதுபோலத்தான், தயக்கம், தடுமாற்றம், தாமதம் ஆகிய கட்டங்களைத் தாண்டி, பணம் படைத்தோரின் மனம் நோகாதபடியும், ஆதிக்கம் கெடாதபடியும், சலுகை சரியாதபடியும் பாதுகாப்புத் தேடிக் கொடுத்து, ஒப்புக்கு ஒரு ஓட்டைச் சட்டத்தைச் செய்துவிட்டு, ஒய்யாரமாக முழக்கமிடுகிறார்கள், சமதர்மம்! ஜனநாயக சோஷியலிசம்!! என்று. அதனைப் பட்டக்காரரும் பாளையக்காரரும் ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, மேலும்