126
கோட்டை கொத்தளங்களைத் தாக்குவது, கோட்டை கொத்தளங்களைத் தாக்குதலிலிருந்து காத்திடுவது எனும் இருவேறு செயலிலும், தீரம் வீரம் நிரம்பத் தேவை; ஆனால், இருவேறு செயல்களிலே ஒவ்வொன்றுக்கென்று ஒவ்வோர் முறை உளது; அந்த முறையில் பயிற்சி பெற்றார்க்கே அந்தத்துறையும் பணியும் தந்திடுதல் வேண்டும், முழுப் பயன்பெற.
வாள் வீச்சிலும் பழக்கம் உண்டு எனினும், இவன் வேல் எறிவதிலே தன்னிகரற்றவன் எனின், அன்னானை அதற்கே அனுப்பி வைத்தால் வெற்றி ஈட்டிட வழி செய்ததாகும். வாட்போர் அறியானோ இவ்வீரன்! அறிந்துள்ளான்! எனவே, வாட்போர்ப் படையிலே சேர்ந்து போரிடட்டும் என்று கட்டளையிடலாம்; அவனும் வாளினைச் சுழற்றிப் போரிடலாம்: ஆனால், அவன் வேல் எறிவதனால் கிடைத்திடும் பலன் கிடைத்திடாது.
அன்பும் அறமும் நிலவிட வேண்டும், பண்பு மிகுந்திட வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவரே, வள்ளுவர். எனினும், அறம் அழிப்போரும் பண்பு கெட்டோரும், அமைதி குலைப்போரும், ஆகா வழி நடப்போரும் உள்ளனரே; அவர்களால் அமளி மூட்டப்பட்டு விடுமானால், அறவுரை கூறிடல் பயனளிக்காதே; எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றன்றோ இன்னல் விளைவித்தவர்களை அடக்கிட இயலும் என்பதனை எண்ணிப் பார்த்திட மறுத்தாரில்லை; மாறாக, அது குறித்து எண்ணி எண்ணிப் பார்த்து ஏற்புடைய கருத்துகள் பலவற்றைக் கூறியுள்ளார். அந்தக் கருத்துகளைக் காணும்போது, என்னே இந்த வள்ளுவர்? வாலறிவன் நற்றாள் தொழுவது பற்றித்தான் கூறினார், அதிலே வல்லவர் என்று எண்ணிக் கொண்டோம்; இதோ போர் முறை குறித்து இத்துணை நுண்ணறிவு கொண்டு வழி காட்டுகின்றாரே, போர்க்களம் பல கண்டவரோ! என்று எண்ணிடுவோம், வியந்திடுவோம். அஃது அவருடைய தனிச் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இன்னவன் இதனை முடித்திட வல்லவன் என்பதனைக் கண்டறிந்து, அதனை அவனிடம் விடல்—என்பதனை எல்லாத் துறைகளுக்கும் ஏற்றதெனக் கூறி வைத்தார்; அஃது போர்முனைத் துறைக்கும் பொருந்தும்;