151
அவன் கூற, பெற்றோர் அதுகண்டு பேருவகைதான் கொள்ள, இல்லமுள்ளார் எல்லோரும் இன்புற்று இருந்திடுதல் பொங்கற் புதுநாளின் பாங்கு; மறுக்கவில்லை. ஆனால், முழுப்பாங்கு என்றதனை மொழிந்திட மாட்டேன் நான்; தித்திக்கும் சுவையுடனே. சிந்திக்கவும் வைக்கும் எண்ணங்கள் பற்பலவும் பொங்கி வருவதுதான் இந்நாளின் தனிச்சிறப்பு, முழுப்பாங்கு. மலரின் எழில் கண்டு மகிழ்வது மட்டும் போதாது, மணம் பெறவேண்டுமன்றோ! அதுபோன்றே பொங்கற் புதுநாளன்று மனைதொறும் மனைதொறும் காணப்படும் கவர்ச்சிமிகு கோலம் - புறத்தோற்றம் - கண்ணுக்கு விருந்தாகிறது. ஆனால், அது மட்டும் போதாது; கருத்துக்கும் விருந்து வேண்டுமன்றோ! உளது உணர்பவர்களுக்கு உணர்பவர்களே, பொங்கற் புதுநாளின் முழுப்பயனையும் பெற்றவராவர். உடன்பிறந்தோரே! நீவிர், அந்நன்னோக்கத்துடன் இத்திருநாளின் தன்மையினை உணர்ந்து பயன் பெற வேண்டுமெனப் பெரிதும் விழைகின்றேன்.
திருநாளின் தன்மையை மட்டுமல்ல, காணும் ஒவ்வோர் பொருளிலும், தெரிந்திடும் புறத்தழகு மட்டும் கண்டு போதுமென்றிருத்தல் ஆகாது; அப்பொருளின் உட்பொருளை, மெய்ப்பொருளை அறிந்திடுதல் வேண்டும். அந்த நுண்ணறிவே, நாம் காணும் பொருள்களின் முழுத்தன்மையையும் துருவிக் கண்டிடவும், காண்பதனால், பயன் பெறவும் வழி காட்டுகிறது. பொருளின் புறத் தோற்றத்தை மட்டுமல்ல, அவைகளின் தன்மையினையும் பயனையும் நுண்ணறிவுடன் கண்டவர் தமிழர்! இன்று தமிழ் பேசிடுவோர் என்று பொதுவாக எண்ணிவிடாதே தம்பி! நான் குறிப்பிடுவது, தமிழராக வாழ்ந்த தமிழர்களை.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று வள்ளுவர் கூறிச் சென்றார்.
காலைக் கதிரவன், மாலை மதியம், ஆடிடும் பூங்கொடி, பாடிடும் அருவி, கொஞ்சிடுங் கிள்ளை. துள்ளிடும் வெள்ளி மீன், மருண்டவிழி மான், ஒளிவிடும் விண்மீன், சிரித்திடும் முல்லை. பேசிடும் புறாக்கள், பழமுதிர் சோலை, வளமிகு வயல்கள், எதுதான், தம்பி! அழகாக இல்லை! எதுதான் தம்பி! இன்பம் தராதிருக்-