உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

இஞ்சி போடவேண்டிய இடத்தில் மஞ்சளைப் போடுகிறார்களா என்று! அந்தப் பக்குவத்தைக் கவனி! ஒரு வேளைச் சோற்றுக்கு இவ்வளவு பக்குவம், முறை, தெளிவு, முயற்சி வேண்டும். முந்தானை கொண்டு அந்த வியர்வை முத்துக்களைத் துடைத்துக் கொள்ளக்கூட நேரமின்றி உன் குயிலாள் வேலை செய்த பிறகுதான் தம்பி! உனக்குப் பொங்கல், பால், பழம். உழைப்பு! முறையான உழைப்பு! பக்குவமான முறை! இடமறிதல்! நேரமறிதல்! அளவறிதல்’... இத்தனையும் வெறும் சொற்கள் அல்ல!! இவைகளின் வடிவங்களே, மனையிலே காண்கின்றாய்! புதிய சமுதாயம் படைத்திட, இவைகளைக் கண்டு கருத்தறிதல் வேண்டும்.

கண்டு கருத்தறிதலோ கடினம்; ஆனால் தேவை; மிக மிகத் தேவை. அறிந்ததை மற்றவர்கட்கு எடுத்துரைத்தல் அதனினும் கடினம்; மிகமிகத் தேவை.

நாடு வாழ்ந்திட, மக்கள் ஏற்றம்பெற, நம் ஆன்றோர்கள் சான்றோர்கள் கூறியன யாவை என்பதனை ஆய்ந்தறிய இவ்விழா நாளில் முயன்றிட வேண்டும்.

இன்றுள்ள புத்தறிவினர் கூறியுள்ளனவற்றினை அன்றிருந்த நம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர் என்பது, கண்டு, கண்சிமிட்டி மகிழ்ந்திருப்பது மட்டும் பயன்தராது. அன்று முதற்கொண்டு சொல்லியும் இன்றுவரை அம்மொழி வழி நாம் நடந்தோமில்லையே என்றெண்ணி வெட்கித் தலைகுனிதல் வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியுள்ளார். கூறி? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்நாளில் பாரதியார் கூறிக் காட்ட வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகும், ஜாதிப் பிடிப்பும் பித்தமும் நீங்கியபாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து, பேதை யொருவன் அதன்மீதே, பட்டினி கிடந்த நிலையில் சாய்ந்திருந்தான் என்றால்—அப்படி ஒரு கதை சொன்னால்—வியப்படைகின்றோம், அறிவுப் பேழை இங்கு... ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே!! எனினும் எத்தனை பேதம், பிளவு, மதியற்ற போக்கு, குருட்டுப் பிடிவாதம், முரட்டுவாதம், சே!!

தம்பி! இதனை எண்ணிடும்போது உள்ளபடி வெட்கம் விலாவினைக் குத்திடுகிறது.