179
“இல்லை! கையெழுத்துப் போடவில்லை” என்று தெரிவித்தார். அதுவரையில் ஒரு பத்துநாள், விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதிலே அவர்களுக்கு ஒரு தனிச்சுவை! அனுபவித்துவிட்டுப் போகட்டும்.
மொழிப்பிரச்சினையிலே உள்ள சிக்கலைப்பற்றியும், தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருப்பதையும், அது குறித்துத் தக்கவிதமான கவனம் செலுத்தாமல், மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இருப்பதையும் எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு, காங்கிரஸ் தலைவர்கள் செய்வதுபோன்ற விளையாட்டிலே ஈடுபட நேரமுமில்லை, நினைப்பும் எழவில்லை.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் பேசினேன். பலன்? என்ன கிடைக்கும் என்று எனக்கே தெரியவில்லை. லால்பகதூர் அவர்களின் பேச்சிலே, இதுபற்றிக் குறியும் தென்படவில்லை; கோடிட்டும் காட்டவில்லை. இந்த நிலை இங்கு, ஆளவந்தார்களின் அணியில்.
ஆனால், முன்பு நான் புதிய திருப்பம் என்ற கட்டுரையில், குறிப்பிட்டுக்காட்டிய ‘சூழ்நிலை’ பொதுவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளில் தெரிகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நந்தாவைக் கண்டு, மொழிப்பிரச்சினையில் ஒரு நல்ல தீர்வு கண்டாகவேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். இரண்டொருவர் அதுபற்றி என்னிடமும் பேசினார்கள் நம்பிக்கையுடன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்தச் சமயம் பார்த்து அழித்துவிட, காங்கிரசிலே சிலர் துடியாகத் துடிக்கிறார்கள் என்பதற்கும் குறிகள் தென்படுகின்றன.
மாநிலங்கள் அவையிலே நான் பேசிய தன் முழுவடிவம் கிடைக்கப் பெற்றிருக்கக்கூடும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள இதழ்கள் கூடுமானவரையில் இந்தப் பேச்சை வெளியிட்டிருக்கின்றன—