உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187

பவன் கரம் வெட்டப்படும் என்பன போன்ற பேச்சுகள் பேசப்பட்டன. பல காங்கிரஸ் அமைப்புகள், இத்தகைய வன்முறையில் ஈடுபடப் போவதாக இதழ்களிலேயே அறிவித்தன. போலீஸ் கமிஷனர், பொது இடங்களில் கறுப்புக் கொடி கட்டக்கூடாது, அமளி ஏற்படும்; உங்கள் கட்சிக் காரியாலயத்தில், வீடுகளில் கட்டிக்கொள்ளுங்கள் என்று எங்களிடமும், கறுப்புக் கொடியைக் கண்டால் அறுக்காதீர்கள், எங்களிடம் கூறுங்கள் நாங்கள் அகற்றிவிடுகிறோம் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கும் சொன்னார். நாங்கள் அதுபோலவே பொது இடங்களில் கறுப்புக் கொடி கட்டவில்லை; எங்கள் வீடுகளில்தான் கட்டினோம். ஆனால், காங்கிரஸ் படையினரும், போலீசாரும் எங்கள் கட்டடங்களிலே அத்து மீறி நுழைந்து கொடிகளை அறுத்தனர்; சிலர் கொளுத்தினர். இந்தவிதமான வன்முறைச் செயல் எழக் காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்களே—என்று கூறினேன்.

விவரமாக நான் இந்தச் சம்பவங்களை விளக்கியது கேட்டு, பல வட இந்திய இதழ் நிருபர்கள், முதல் முறையாக இந்த விவரம் கிடைக்கிறது; இதுவரை தெரியாதிருந்தது என்று கூறி வியப்படைந்தனர்.

இன்னும் தெரியவேண்டியது நிரம்ப இருக்கிறது; நள்ளிரவில் மாணவர் விடுதிகள் தாக்கப்பட்டதும், அங்குக் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்பட்டதும், அமைதியாக இருந்த மாணவர்களின் கிளர்ச்சி அமளியாகிட வழிவகுத்த அடாத நடவடிக்கைகளும், இவ்விதம் பல உள்ளன. இவைகளெல்லாம் அனைவருக்கும் தெரிய வேண்டும். உண்மை அப்போதுதான் துலங்கும், எங்கள் கழகத்துக்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது மெய்ப்பிக்கப்படும். கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், விடுதித் தலைவர்கள், இதழாசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர்கள் சான்றளிக்கத் தயாராக உள்ளனர். ஆகவேதான் நீதி விசாரணை வேண்டுமென வற்புறுத்துகிறோம் என்று விளக்கமளித்தேன்.

அடுத்தபடியாக ஒரு நிருபர், “முதலமைச்சர்கள் மாநாடுபற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.