உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197

ஆக்கும் திணிப்பு ஒழிக!-என்று நீட்டி முழக்கிக் கொண்டிருக்க முடியாது. அதன் காரணமாகத்தான் இந்தி ஒழிக என்று சுருக்கமான முழக்கம் இருக்கிறது. மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு! என்ற இலட்சிய முழக்கம் தந்தார். அவர் விரும்பியது வெள்ளைக்காரர்கள் வெளியேற வேண்டும் என்பது அல்ல; வெள்ளையர் நடத்தும் ஆட்சி ஒழியவேண்டும் என்பது. வெள்ளையர் இந்தியாவை ஆட்சி செய்வது வெளியேற வேண்டும் என்று விரித்துக் கூறவில்லை, சுருக்கமாக வெள்ளையனே வெளியேறு! என்றார். செய் அல்லது செத்துமடி என்பது அவர் தந்த மற்றொரு சுலோகம். என்ன செய்ய வேண்டும். எப்போது, எப்படி. ஏன் சாகவேண்டும் என்றெல்லாம் விளக்கமாக்கி, விரிவாகக் கூறவில்லை. சுருக்கமாக, செய் அல்லது செத்துமடி என்றார். இலட்சிய முழக்கங்கள் அவ்விதந்தான் சுருக்கமாக அமையும் என்று கூறினேன்.

“இந்தி எதிர்ப்பு உணர்ச்சி காரணமாகக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள வேற்றுமை ஓரளவு குறைந்துவிட்டது உண்மையா?” என்று ஒருவர் கேட்டார்.

உண்மைதான். பல காங்கிரஸ்காரர்கள் நாங்கள் கூறும் கருத்துக்களைப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சட்டசபையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இந்தித் திணிப்பைக் கண்டித்துப் பேசியதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அரசியல் கட்சிகள் அமைத்துக் கொண்டுள்ள அரண்களை உடைத்துக் கொண்டு இந்தி எதிர்ப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்பிவிட்டது என்று கூறினேன்.

வேறொரு நிருபர், “பல ஆட்சிமொழித் திட்டமும் கூறுகிறீர், தொடர்புமொழித் திட்டம்பற்றியும் கூறுகிறீர்; இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் அல்லவா?” என்று கேட்டார்.

எப்படி முரண்? முரண் அல்லவே! பல மொழிகள் இருப்பதனால் தான் ஒரு தொடர்பு மொழிப் பிரச்சினை எழுகிறது. இரண்டு திட்டமும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல; துணை என்று கூறினேன்.