24
இந்தி ஆதிக்க விஷயத்திலே காங்கிரஸ் துரைத்தனம் காட்டிவரும் பிடிவாதம் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கி வைத்திருக்கிறது.
உங்களைப் பேச அனுமதித்திருக்கிறார்களே என்பதும், வெளியே விட்டு வைத்திருக்கிறார்களே என்று கூறுவதும், சுட்டுத் தள்ளாமல் இருக்கிறார்களே என்று கூறுவதும், ஆட்சி நடத்தும் வாய்ப்பினைப் பெற்றதனால் ஏற்பட்டுள்ள ஆணவமன்றி, அறிவுடைமை என்று எவரும் கூற முற்படமாட்டார்கள். நெரித்த புருவம், உருட்டு விழி, மிரட்டும் பேச்சு, நெடுநாட்களுக்கு நிலைத்து இருப்பதில்லை.
தம்பி! பலருக்கும் புரியும்படி இதனை எடுத்துக் கூறிடக் கேட்டுக்கொள்கிறேன். இந்தி ஆதிக்கப் பிரச்சினையிலிருந்து, இன்று நமக்கு அமைந்துள்ள அரசு, அறிவாளர்களை எவ்வளவு அலட்சியப்படுத்தி வருகிறது, மக்களின் முறையீட்டினைக் கேட்டும் எத்துணை மமதையுடன் நடந்துகொள்கிறது என்பது புரிகிறதல்லவா! இவ்விதமான ஓர் ஆட்சி முறையையும், அது கடைப்பிடிக்கும் மொழி ஆதிக்கத் திட்டத்தையும் துணிவுடன் எதிர்த்து நிற்பதிலே நாம் பெருமை கொள்கிறோம். பலர் அடக்கப்பட்டுப் போய்விட்டனர். சிலர் அடைக்கலப் பொருளாகிவிட்டனர். வேறு சிலர் ‘அமங்கல’ நிலை பெற்றுவிட்டனர். நமது கழகமோ, எத்துணைக் கொடுமைகள் தாக்கிடினும். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பது என்ற உறுதி தளராமல், தொடர்ந்து அறப்போர் நடாத்தி வருகிறது.
மக்கள் விரைவில் தமது மனத்திலுள்ளதை வெளிப்படையாக எடுத்துக் கூறிடும் இயல்பினைப் பெறுவதில்லை. எத்தனையோ விதமான அச்சுறுத்தல் அவர்களுக்கு. துரைத்தனத்தைப் பகைத்துக்கொண்டால், தொழில்கெடும். வேலை போய்விடும், குடும்பம் சிதறுண்டு போய்விடும், கொடுமைக்கு ஆளாக வேண்டிவரும் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலை.
இந்தியோ சிந்தியோ, விருப்பமோ கட்டாயமோ, மெள்ளமெள்ளவோ வேகவேகமாகவோ, எப்படியோவரட்டும், எதுவோ ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கட்டும், நாம் மாடு மனைபெற்று, மனைவி மக்களுடன்,