உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

காட்டிடவும், சட்டம் பற்றிய சில பொதுக் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.

சட்டம், ஆட்சி செய்கிறது சட்டம்!

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது!

சட்டம், எவரையும் கட்டுப்படுத்தக்கூடியது!

சட்டம், வளையாது, நெளியாது; வல்லவனைக் கண்டு ஒளிந்துகொள்ளாது; இளைத்தவன் மீது காரண ற்றுப் பாயாது.

சட்டத்தின் கண்முன்பு அனைவரும் ஒன்று தான்!

சட்டம், சமுதாய ஒழுங்கைக் காத்து வருகிறது.

சட்டம், சமுதாயம் சின்னாபின்னமாகாதபடி பார்த்துக்கொள்கிறது.

சட்டம், நாட்டிலே காட்டுமுறை புகாதபடி தடுத்து நிறுத்துகிறது.

சட்டம் மக்கள் ஒருவருக்கொருவர் கூடி வாழ்வதிலே தான் பெருமையும் சுவையும் பயனும் பண்பும் இருக்கிறது என்ற பேருண்மையை நிலைநாட்டத் துணை புரிகிறது,

சட்டம், உயிர், உடைமை, உரிமை, அமைதி, ஆகியவைகளுக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக்கொள்ள விழிப்புடன் இருக்கிறது.

சட்டம், கோபதாபம், விருப்பு வெறுப்பு, வெறி போன்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, தகாத செயலில் ஈடுபட்டு, சமூகத்துக்கு எவரும் ஊணம் விளைவித்து விடாதபடி தடுத்துக்கொண்டிருக்கிறது.

சட்டம், மக்களுக்குள்ளாக ஏற்படக்கூடிய தொடர்பையும், மக்களுக்கும் அரசுக்கும் ஏற்படும் தொடர்பையும், மாண்புடையதாக இருக்கச் செய்யும் பெரு முயற்சியில் ஈடுபடுகிறது.

சட்டத்தின் கண்கள் கூர்மையானவை! சட்டத்திற்கு நெடிய கரங்கள்!