33
ஆகவே, பொதுவாக அனைவரும் வாழவேண்டும், அதற்குக் குந்தகம் ஏற்படாத முறையில், நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு ஒழுக வேண்டும் என்பதே சமுதாய நெறி—அறவழி ஆகிறது. அதனைக் கட்டிக்காத்து வருவதே, சட்டம். எனவே சட்டம், அறவழியை அழியாது பாதுகாத்துத் தருகிறது. ஆகவே, அறம் நிலைக்க, சட்டம் அச்சாணியாகிறது. அந்த அச்சாணியின் ஒழுங்குக்கும் நேர்த்திக்கும், வலிவுககும் ஏற்பத்தான் சமுதாயத்தின் தரம் அமையும். சமுதாயத்தின் தரம் உயர உயர அங்குக் காணப்படும் சட்டததின் நேர்த்தியும் மேன்மை மிக்கதாகும். சட்டத்தின்படி ஒழுகி வருவதன் மூலம் ஏற்படும் வலிவும் பொலிவும், சமுதாயத்தின் தரத்தை உயர்த்துகிறது; ஆகவே சட்டம், சமுதாயத்தை உருவாக்கி, பாதுகாத்து, வளரச்செய்து, அதனுடைய தரத்தையும் உயர்த்துகிறது.
எந்த அளவுக்கு, ஒரு சமுதாயத்தின் தரம் உயர முடியும் என்று எண்ணிபபார்த்த பேரறிவாளர்கள் கூறியிருப்பது, மேலெழுந்தவாரியாகக் கவனிப்பவர்களுக்கு விந்தையாகக்கூடத் தோன்றும். சட்டங்களே தேவை இல்லாத அளவுக்குச் சமுதாயத்தின் தரம் உயர்ந்து விட்டது என்ற நிலை பிறந்திடவேண்டும் என்கிறார்கள் அந்தப் பேரறிவாளர்கள்.
தரம் உயர்ந்துவிட்ட சமுதாயத்துக்குச் சட்டங்கள் தேவையில்லை!
தரம் கெட்டுவிட்ட சமுதாய நிலையிலும் சட்டங்கள் தேவை இல்லை! ஏனெனில், தரம் கெட்டுவிட்ட சமுதாயத்தில், சட்டங்கள் சரிந்து போய்விடும்!
இது வியப்புக்குரிய செய்தி என்று மட்டும் கருதுவது போதாது; மிக உயர்ந்த நிலையிலும் சட்டம் தேவைப்படாது, மிகக் கேவலமாகிவிட்ட நிலையில் சட்டம் தேவை இல்லை என்பது நகைச்சுவைப் பேச்சும் அல்ல.
இனி மருந்து எதற்கு? என்று நோய் முற்றிப்போய் ஆள் தேறமாட்டான என்று தெரிந்துவிட்ட போதும் கூறுகிறார்கள்; நோய் நீங்கிப்போய், ஆள் நல்ல உடற்கட்டுடன் விளங்கும்போதும் கூறுகிறார்கள்.
அ. க.—3