35
என்று, பகைவர்களை எதிர்த்திடும் போர்ச் சூழ்நிலையில், பேச்சு எழுகிறது; கேட்போர், பதறுவதில்லை; மாறாக, பாராட்டுகிறார்கள்.
கொளுத்திவிட்டேன்!
கொள்ளை அடித்தேன்!
மானபங்கப்படுத்தினேன்!
என்று கூறுவதைக்கூட, போர்க்காலத்தில், கூச்சமின்றிக் கேட்டுக்கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது,
ஆனால், இந்த மனநிலை, உள்ளத்திலே மூண்டுவிடும் வெப்பம் குறையக் குறைய மாறத் தொடங்கி, பகை மடிந்த பிறகு, மடிந்துபோகிறது.
புதிய கருத்துகள், புதிய முறைகள், புதிய ஏற்பாடுகள் மிகுதியாக உள்ள இந்நாட்களிலேயும், ஒவ்வொரு பெரும் போருக்குப் பிறகும், கொடுமைகளையும் அழிவுச் செயலையும் வெறுத்தும் கண்டித்தும், மனிதத்தன்மையின் மேம்பாட்டினை வலியுறுத்தியும், பல ஏடுகள் வெளியிடப்படுகின்றன; போர் இனிக்கூடாது, போரற்ற உலகு காணவேண்டும், போர் எழாத சூழ்நிலை அமைக்க வேண்டும், அழிவுக் கருவிகளை அழித்திடவேண்டும், கலந்து பேசிக் கேடு களையவேண்டும், கூடி வாழ்ந்திட முறை காணவேண்டும் என்ற பேருண்மைகள் வலியுறுத்தப்படுகின்றன.
அவ்விதமான பேருண்மைகளை வலியுறுத்துவோர்களைப் பேரறிவாளர் என்று போற்றிடச் சமுதாயம் முன்வருகிறது.
பெரும்போரில் ஈடுபட்டுப் பகைவர்களை அழித்திடப் பல்வேறு கொடுமைகளையும் கூசாது செய்தவர்களே கூட, போர் முடிந்தபிறகு, போர் கொடுமையானது, போர் கூடாது, அழிவு தடுக்கப்படத்தான் வேண்டும், அமைதியான உலகே ஆனந்த உலகு என்று உணர்ந்து பேசுகின்றனர்.
போரில் ஈடுபட்டவர்களுக்கே போர் கூடாது என்பதிலே உண்மையான எண்ணம் ஏற்படும் என்று அறிவாளர் கூறியிருப்பது, இந்தப் போக்கை அறிந்ததால் தான்.