49
ஏசக்கேட்டால், அண்ணா! எரிச்சலல்லவா ஏற்படும்? நீ மகிழ்ச்சி காட்டுகிறாயே என்றுதானே தம்பி! கேட்கிறாய். கேட்கத்தான் செய்வாய்! ஒன்று மறந்து விடுகிறாயே, தம்பி! எத்தனை முறை நினைவுபடுத்தினாலும். எனக்கு இத்தகைய பேச்சுகளைக் கேட்டு எரிச்சல் வருவது இல்லையே!! ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? எந்த நிலையில் இப்படிப் பேசுவார்கள்? என்று இந்தவிதமாக அல்லவா என் எண்ணம் செல்கிறது.
அவ்வளவு பெரியவர், அத்தனை மகத்தான நிலையில் இருந்துகொண்டு, ‘கனம்கள்’ கைகட்டி நிற்க, கனவான்கள் வாய்பொத்திக்கிடக்க, கொலுவீற்றிருக்கும் நிலையில், நம்மைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார், நம்மைக் குறித்துத்தான் பேசமுற்படுகிறார் என்றால், நாம் தம்பி! அவருடைய கவனத்தை ஈர்க்கத்தக்க வல்லமையுடன் இருக்கிறோம் என்பது விளக்கமாகிறதல்லவா!! என் மகிழ்ச்சிக்குக் காரணம் அது; பொருத்தமானதா அல்லவா என்பதை எண்ணிப் பார்த்திடு, தம்பி! புரியும், உனக்கும் மகிழ்ச்சி பூத்திடும்.
இப்போதும் தம்பி! நாட்டிலே, பல கட்சிகள் உள்ளன காங்கிரசை எதிர்த்திட. காமராஜரின் கவனம் அந்தக் கட்சிகளின் மீதா செல்கிறது! “கம்யூனிஸ்டு கட்சி— அசல்—விலைவாசி உயர்வைக் கண்டிக்கப் போராட்டம்—போர் ஆட்டம் அல்ல—நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது! ஒரு வார்த்தை அதுபற்றி! உஹும்!! (இதுவரையில்) நினைப்பு வந்தால்தானே? சம்யுக்த சோஷியலிஸ்டு கட்சி (பழய பிரஜாசோஷியலிஸ்டு கட்சி) கிளர்ச்சி நடத்தியிருக்கிறது. ஒரு பேச்சு அதுபற்றி? கிடையாது! மேடை ஏறினால் “மன்னாதி மன்னா!” என்று பாடிடுவோர் புடைசூழ்ந்திருக்கும் வேளையில், காமராஜர் பொருள் பேசும் என்ன? தி.மு. கழகம்பற்றி! அவ்வளவு வேலை செய்கிறது, அந்த நினைப்பு!
சிற்றரசர்கள் கப்பம் கட்டுகிறார்கள்! பட்டத்தரசிகள் புன்னகை புரிகிறார்கள். ஆடலழகிகள் ஆடுகிறார்கள், குயிலிகள் பாடுகிறார்கள். இருந்தும், பட்டத்தரசனின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை சோர்ந்து காணப்படுகிறான்; என்ன? என்ன? என்று ஆயிரம் கண்கள் கேட்கின்றன! ஒரே பெருமூச்சுத்தான் பதில்!! இந்நிலை