உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

விடப்படுவதால்—விளையும் விபரீதம் பற்றிக் கூறிவிட்டு, ஒரு விந்தையை இழைத்திருக்கிறார். இரக்க மனம் படைத்த சீமான் மகன், இலட்சியம் அறிந்த ஒரு வாலிபன், கொடுமை கொட்டியதால் கொதிப்படைந்த ஒரு குமரி! இந்த மூன்று பேர்களை வைத்துக் கொண்டு, உணவுப் பொருளின் விலையை, இலாபவேட்டை நோக்கம் கொண்ட வணிகர்கள் விஷம்போல ஏற்றிவிட்டு விடுவதனால், ஏற்படும் விளைவுகளை, நாம் உணரவும் உருகவும் செய்துவிடுகிறார்.

பிறகு? பிறகு? என்ன செய்தான் அந்தச் சீமான் மகன்? அந்தக் குமரி? என்று கேட்கிறாய் ஆவலாகத்தான் இருக்கும், அறிகிறேன், ஓ. என்ரியின் முறை என்ன தெரியுமா, தம்பி! சிறு கதையின் கடைசி இரண்டொருவரிகளில், யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் அளித்து முடிப்பார்! அந்த இரண்டொரு வரிகளில், ஒரு பெரிய தத்துவமே கிடைத்திடும்.

சே! இந்த ஏழைகளுக்கே ஆணவம் அதிகம்!—என்று வெகுண்டுரைத்து விட்டுச் சென்றான் சீமான் மகன் என்று முடித்திடலாம், கதையை.

இலட்சியமறிந்த இளைஞன், சீமான் மகனின் கண்கள் தளும்பக்கண்டு, ‘பாவம்! இவன் நல்லவன். இதயம் கொண்டவன். இவனை வெறுக்கக் கூடாது. தகப்பனார் செய்துவிட்டுப்போன கொடுமையை எண்ணி இவன் உள்ளம் உருகிக்கிடக்கிறான்” என்று பரிந்து பேசினான்; மூவரும் நண்பர்களாயினர் என்று கதையை முடித்திருக்கலாம்.

“என்ன காரியம் செய்துவிட்டோம். உதவி செய்ய வந்த உத்தமனை உதாசீனம் செய்து விட்டோமே! அவன் உள்ளம் என்ன பாடுபட்டிருக்குமோ?” என்று எண்ணிய பெண், அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் என்று முடித்திருக்கலாம். பலவிதமான முடிவுகள். தம்பி! உனக்கும் எனக்கும் தோன்றும். ஆனால் விந்தையான—உலக நடை முறையை விளக்கிடத்தக்க—முடிவு என்னவாக இருக்கமுடியும் என்பதைக் கண்டறிந்து கூறிடும் திறன் ஓ. என்ரிக்குத்தான் உண்டு.

இந்தக் கதையின் மூலம் என்ன தெரிவிக்க விரும்புகிறார் ஓ. என்ரி.?

.