உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

வீடு கட்டிக் கொண்டீர் மாளிகை போல!

விலைக்கு எடுத்துக்கொண்டீர் சர்க்கார் உடைமையை, மலிவாக!

உற்றார் உறவினருக்கு வழிகாட்டிவிட்டீர், கொள்ளை அடிக்க.

தெரியும்! தெரியும்! உம் தில்லுமுல்லுகள்!

இவ்விதம், கொதித்தெழுந்து பேசுகிறார்கள் இன்று காங்கிரஸ் அமைச்சர்களைப்பற்றி, பல்வேறு இடங்களில், பலப்பலர். வெட்டவெளிக் கூட்டங்களில் மட்டும் அல்ல; சட்டமன்றங்களில்!!

காங்கிரஸ் அமைச்சர்களையா இப்படி ஏசுகிறீர்கள்? என்று கேட்பவர்களுக்கு, இடித்துரைப்பார் பதிலளிக்கிறார்கள்; காங்கிரசால் அமைச்சர் ஆனவர்களைக் கண்டிக்கிறோம், நாட்டுமக்கள் சார்பில்; நல்லாட்சி வேண்டும் என்பதற்காக; வீட்டு நெருப்பு என்பதற்காக அதில் வீழ்ந்து புரண்டிடுவார் உண்டோ? என்று கேட்கின்றனர்.

ஆதாரமற்ற புகார்கள். அரசியல் எதிரிகளின் அங்கலாய்ப்பு

விஷமிகள் கட்டிவிடும் வீண் புரளி

வேற்று நாட்டானிடம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளின் தூற்றல் பேச்சு.

இவ்விதமாக, பெருந்தலைவர்கள், கண்டனத்திற்கு இலக்கான காங்கிரஸ் அமைச்சர்கள் சார்பிலே வாதாடினர்; திரையிட்டுப்பார்த்தனர்; பூசிமெழுகிப் பார்த்தனர்; பலன் இல்லை; கண்டனக் கணைகள் சரமாரியாகக் கிளம்பின, துளைத்தன; புனுகுபூசினர் புண்ணின் நாற்றம் போகவில்லை; புரையோடிப்போனபிறகு, கெய்ரான் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்; எங்கோ ஓரிடத்தில் எம்மையும் அறியாமல், முளைத்து விட்டிருந்த களை இது; கழனி முழுதும் அதுவே என்று எண்ணாதீர்கள், மற்ற இடங்களிலே உள்ளவை, கரும்பு, செந்நெல், கனிவகை மணி என்று பேசி, ஆத்திரமேலிட்டு எழும் மக்களைச் சமாதானப்படுத்திட முயலுகின்றனர்.