உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

ம:– பின்னே, நீங்க எதுக்காக எறிஞ்சி விழறிங்க...

ம. மா:– நடையா நடந்தேன் உன் வீட்டுக்கு அந்த அதிகாரி கணக்குப் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு போயிட்டான்...மிரட்டிக்கிட்டு இருக்கிறான்...மானம் போகுதுன்னு...மகாநாடுன்னா பணம், மந்திரிவர்ராருன்னா பணம், மண்டலத்தேர்தல் என்றா பணம், மகாத்மா ஜெயந்தின்னா பணம்; யுத்தநிதி, கடன் பத்திரம், கூட்டத்துக்குப் பணம், இவ்வளவுக்கும் நானு! என்னை ஒரு அதிகாரி கேவலப்படுத்தறது, அதைக் கேட்க ஆள்கிடையாது. இது நியாயமா...இந்த விதமாக நீங்க நடந்து கொண்டா, எங்க உதவி எப்படிக்கிடைக்கும்...சொல்லு நீயே...

ம:– அந்த அதிகாரி விஷயமா, சொல்லவேண்டிய இடத்திலே சொல்லவேண்டியதை, சொல்லவேண்டிய நேரம் பார்த்து சொல்லி இருக்கறேன்...நான் என்ன, நன்றிகெட்டவனா! காங்கிரசுக்கு நீங்க செய்கிற உதவியை மறந்துவிடுவேனா...

ம.மா:– அதிகாரி விஷயமா நீ சொன்னது என்னத்துக்குப் பயன்பட்டுது. கல்லுப்பிள்ளையார்போல இங்கேதானே இருக்கிறான் அந்த இரும்புத்தலையன். அவனை வேறு இடம் மாற்ற முடியல்லையே...

ம:– முடியல்லே. ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஏன் முடியவில்லை என்கிற காரணம் தெரியுமா உங்களுக்கு...

ம.மா:– உன்னோட பேச்சுக்கு மேலிடத்திலே அவ்வளவு தான் மதிப்புப் போலிருக்குது...

ம:– எனக்கு உள்ள மதிப்பு எந்தவிதத்திலேயும் கெட்டுப்போகவில்லை. உங்களோட பேரைச் சொன்னதும் மேல் இடத்திலே, மேலே கீழே பார்க்கறாங்க. காங்கிரசுக்கு நீங்க விரோதியாகி விட்டதாக யாரோ கதை கட்டிவிட்டிருக்காங்க...ஏதோ சங்கக் கூட்டத்திலே பேசிவிட்டிங்களாமே, காங்கிரசுக்கு இந்தத் தடவை வெற்றி கிடைக்காது என்று...

ம.மா:– ஆமாம்! கோபம் அவ்வளவு எனக்கு. எங்களோட உதவியைப் பெற்றுக்கொண்டு எங்களையே கேவலமா நடத்தினா காங்கிரசு எப்படி ஜெயிக்கும்னு கேட்டேன்...