உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

R. ஜம்புநாதன் M.Sc.
H. R. வைத்தியநாத் B.Sc.
N. K. சீனுவாசன் B.Sc.
R. நாகராஜா M.Sc.


பட்டியலைப் பார்த்தனையா! பட்டதாரிகள், அதிலும் தொழிலியல், பொறியியல், மின் இயல் போன்ற விஞ்ஞானத்துறையின் பட்டங்கள், மிக நீண்டகாலமாகப் புதுமுறைத் தொழில் வளம் பெறாமல் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்தோர் நாட்டினைப் புதுப்பொலிவு பெற்றிடச் செய்திடும் பொறுப்பினை மேற்கொள்ளவதற்கான தகுதியும் திறமையும் பெற்றிருப்பவர்களின் பட்டியல். இருண்ட சிற்றூர்கள் ஒளி பெற்றிடவும், துவண்டிடும் தொழிலினை முறுக்கேற்றிடவும், மனிதனைக் கசக்கிப் பிழிந்திடும் கடின உழைப்பைக் குறைத்திட யந்திர வலிவினைத் துணையாக்கிடவும், பொருள்களின் தன்மையினை நுணுகிக் கண்டறிந்து பயனை மிகுதியாக்கிடவும், எந்த விஞ்ஞான அறிவுத்திறமை தேவையோ, அதனைப் பெற்றுள்ள அறிவாளர்களின் பட்டியல்! இவர்கள் காட்டாறுகளைக் கட்டுப்படுத்துவர், கரம்பைக் கழனியாக்குவர், கடல்நீரைக் குடிநீராக்கிடுவர், வேகம், வலிவாக மாறிட வழிசெய்வர்—இவர்களைப் பாரதியார் ‘புதிய பிரம்மாக்கள்’ என்பார்! அத்தகைய சிறப்பியல்பு பெற்றவர்கள்; பெற்றுள்ள திறமையினை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளவர்கள்—பெங்களூர் விஞ்ஞானத்துறைக் கல்லூரியில் பயின்று வருபவர்கள்! இவர் போன்றோரின் கரம் பட்டுப்பட்டுத்தான் நாடு செல்வபுரியாகிடவேண்டும். இவர் போன்றாரின் தொகை பெரும் அளவு பெற்றதனால் பிரிட்டனும் ஜெர்மனியும், ரஷியாவும், அமெரிக்காவும், இத்தனை வளர்ச்சிகண்டன. ஆனால்......!

பெருமிதமல்லவா கொள்ளவேண்டும், பழமைப் பிடியிலே சிக்கிக் கிடந்திட்ட நாட்டை மீட்டிடத் திறமை பெற்றுள்ளவர்களில் பட்டியலைக் காணும்போது; புதிய உற்சாகமும் நம்பிக்கையுமல்லவா பெறவேண்டும்; அதற்கு மாறாக இந்தப் பட்டியலையும் காட்டிவிட்டு, பெருமூச்செறிவது ஏன்! ஆனால்......என்று இழுப்பு எதற்காக என்று கேட்கிறாய்; புரிகிறது.