இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
43
டதா! மகாப் பிரபோ! அம்பறாத்தூணியில் கணைகள் இல்லை! வில்லும் ஒடிந்துவிட்டது! இனி உமக்குத் துணை நிற்க இயலாது! ஆகவே மணிமுடியை மறைத்துக்கொண்டு மறைவான இடம் சென்றுவிடும்; சிக்கினால் சீரழிவு ஏற்படும்; சென்றுவிடும் பாதுகாப்பான இடம்! என்று களத்திலே நின்று படை நடாத்தியவன் கை பிசைந்து கொள்ளும் காவலனுக்குக் கூறிய கதை போலாகி விட்டதோ! இந்த ஆட்சியாளர்களுக்கு அவர்களை ஆதரிக்கும் எழுத்தாளர்கள் அவ்விதம் கூறிவிட்டார்கள் போலிருக்கிறது.
கழகத்தாரின் பேச்சையும் எழுத்தையும் வலிவற்றதாக்க, பொருளற்றதாக்க நாங்கள் எங்களால் ஆனமட்டும் பார்த்தோம்; உரத்த குரல் எடுத்தோம், உருப்போட்டவைகளை ஒப்புவித்துப் பார்த்தோம், உருட்டி மிரட்டிப் பார்த்தோம், இழிமொழி பொழிந்து பார்த்தோம், பழிச்சொற்களை வீசிப்பார்த்தோம், இட்டுக்கட்டிப் பார்த்தோம், பொய்யும் புனை சுருட்டும் பொழிந்து பார்த்தோம், கலகப்பேச்சை மூட்டிப்பார்த்தோம். வன்முறையைத் தூண்டிடும் பேச்சையும் கொட்டிப்பார்த்தோம்; இத்தனையும் பயன்படவில்லை; இத்தனைக்கும் கிடைக்காத மதிப்பு, அந்தக் கழகத்தாரின் பேச்சுக்கும் எழுத்துக்கும் கிடைத்து வருகிறது; எங்கள் பேச்சை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். கழகப் பேச்சும் எழுத்தும் மக்களிடம் எழுச்சியை, விழிப்பை, வீரத்தை, தியாக உணர்வை ஊட்டிவிட்டிருக்கிறது, மேலும் ஊட்டியபடி இருக்கிறது; ஆகவே, இனி எமது பேச்சையும் எழுத்தையும் நம்பிவிடுவது கூடாது; அவை உம்மைப்பாராட்ட, வாழ்த்துக்கூற, வரவேற்பளிக்கமட்டும் வைத்துக் கொள்ளலாம் இப்போது உடனடியாக எந்தச் சட்டத்தைக் கொண்டாகிலும் கழகப் பேச்சும் எழுத்தும் தடுக்கப்பட வழிசெய்யுங்கள்! உடனே! அவசரம்! அவசரம்!
என்று ஆளவந்தார்களின் அன்புக்குத் தம்மைப் பாத்திரமாக்கிக்கொண்ட சண்டமாருதப் பேச்சாளர்களும் வழுக்கிவிழும் அளவுக்கு ஆத்திரப் போதையினை ஏற்றிக் கொண்டுவிட்டுள்ள எழுத்தாளர்களும், முறையிட்டுக் கொண்டார்கள்போலும்!