உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

காத முறையில் செய்திகள் வெளியிடப்பட்டு விடுவதுண்டு.

மாணவர்களுக்குக் கழகத் தலைவர்கள் புகாரி ஓட்டலில் பிரியாணி வாங்கிக் கொடுத்து மயக்கிவிட்டார்கள் என்று முதலமைச்சர் சொன்னதாகப் பத்திரிகைகளிலே வெளிவந்தது; படித்தோம், பதறினோம்.

முதலமைச்சர் இதற்கு ஒரு மறுப்பும் வெளியிடவில்லை, பல நாட்கள் உருண்டோடியும்!

தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தால்கூடப் பத்திரிகைகள் மறுப்பை வெளியிட்டிருக்கும். செய்தாரில்லை. செய்யவேண்டும் என்று தோன்றவுமில்லை.

ஒரு திங்கள் அளவு சென்ற பிறகு, நான் அப்படிச் சொல்லவே இல்லை; பத்திரிகையில் வந்தது வெறும் புரளி என்று முதலமைச்சர் கூறினார். அதனைப் பத்திரிகைகள் வெளியிட்டன; வேறென்ன செய்ய முடியும்?

ஒரு திங்கள் அளவு வாய் மூடிக்கொண்டிருந்து விட்டு இப்போது ‘என் வாயில் பிரியாணி என்ற வார்த்தையே வராது’ என்று முதலமைச்சர் சொல்கிறார், என்ன செய்தோம்? சரி! ஒரு விளக்கம், மறுப்பு, சமாதானம்—என்ற முறையில் கருதிக்கொண்டோம். ‘இல்லை! இல்லை! பிரியாணி என்று சொன்னார், இன்னின்ன பத்திரிகைகளைப் பார்த்தால் புரியும்!’ என்று கூக்குரல் எழுப்பினார்களா! இல்லையே!! பெரியவர் கூறிவிட்டார், சரி என்று இருந்து விட்டோம்.

இவர் போன்றார் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதை இல்லை என்று மறுக்கலாம், புது விளக்கம் தரலாம், பத்திரிகையில் ஆயிரத்தெட்டு வரும், நானா பொறுப்பு என்று தர்பார் பேசலாம். நாடு தாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் நான் பேசியிருப்பதற்கு—இன்ன பொருள்—இதற்குத் தப்பான பொருள் கொள்ளாதீர்கள் பொருத்தமற்று; தொடர்பற்றுப் பேசாதீர்கள் என்று நான் விளக்கம் அளித்தால், அதனைக் கவனிக்கக்கூட மாட்டார்களாம் இவர்கள்! ஏன்? இவர்கள் பெரிய இடம், நான் சாதாரணம்! நியாயம் பொது! நேர்மை எத்தனை உயரம் சென்றாலும் இருக்கவேண்டும். இருக்கிறதா என்பதற்கு எனக்கல்ல, அவரவர்கள் தமது நெஞ்சுக்குப் பதில் கூறிக்கொள்ள வேண்டும்.