உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

புள்ளிமானை அடித்துத் தின்றிடும் புலி உறுமுவதும், ஆட்டுக்குட்டியைப் பிடித்துக் கொன்றிடும் ஓநாய் கத்துவதும், காட்டிலே, நாட்டிலே, சில வேளைகளிலே அக்கிரமக்காரர்கள், சூதுபல செய்து நீதியைச் சாய்த்துவிட்டு, ஆர்ப்பரிப்பதுண்டு, அவர்களின் எண்ணம் எல்லாம் முடிந்துவிட்டது என்பதால். பேதமையான எண்ணம் மட்டுமல்ல, தலை சுற்றும் அளவுக்குத் தற்பெருமை ஏறிவிட்டது என்பதும் அந்த ஆர்ப்பரிப்பின் பொருளாகும்.

என்னை எதிர்க்க இனி எவனால் ஆகும்!
எதிர்த்து நின்றவன் என்ன கதியானான் காணீர்!
தாக்கினேன்! தகர்ந்துபோனான்!
பொடிப் பொடியானான் போரிட வந்தவன்!

இவ்விதம் ஆர்ப்பரித்தவர்கள் ஒவ்வொருவரும், தமது வல்லமை பற்றித் தவறான கணக்குப் போட்டுக்கொள்பவர்களே என்பதனை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் எண்ணற்றன உள்ளன வரலாற்றுச் சுவடிகளில்! எக்காளமிடுவோர் இதனை நினைவிற்கொள்வதில்லை.

தரம் குறைந்தவர்கள் மட்டுமல்ல, ஓரளவு தரம் உள்ளவர்களுக்கேகூடச் சில வேளைகளில் வெற்றி தந்திடும் மகிழ்ச்சி, போதையாகி விடுவதுண்டு.

பிறகோர் நாள் வீழ்த்தப்பட்ட ஜூலியஸ் சீசர், களம் சென்று வெற்றி கண்டது குறித்துத் தன் நாட்டவருக்குச் ‘சேதி’ அனுப்பியபோது, சென்றேன்! கண்டேன்! வென்றேன்! என்று குறிப்பிட்டிருந்தான்—தனது வல்லமையின் அளவுபற்றி அவனுக்கு அத்தனை பெரிய கணக்கு.

ஜூலியஸ் சீசராவது, சென்றேன்—கண்டேன்—வென்றேன் என்றார்! முதலமைச்சர் பக்தவத்சலமோ, சென்றேனில்லை! வென்றேன் காண்பீர்! என்று பேசுகிறார்! பேசுகிறாரா? முழக்கமிடுகிறார்! களம்கூடச் செல்லாமல்—வெற்றிபெற்ற வேந்தர்வேந்தே! வாழ்க உமது வீரம்! வளர்க உமது தீரம்!! என்று வளைந்துபோனவர்கள் சொல்லாரம் சூட்டுகின்றனர்.

காணாததைக் கண்டவர்கள்! என்று பேசிடுவோரும், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்றும், திருச்செங்கோட்டையும்,