உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அந்த நிலையில் என்னை என் தோழர்கள் காணவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவர்களே! உங்களால் முடிந்த மட்டும் இழிமொழிகளை மாலையாக்கி எனக்களியுங்கள், என் தோழர்கள் என்னை அந்த நிலையிலே காணட்டும்!

அடைபட்டுக் கிடந்த சேற்று நீர், கல் பெயர்க்கப்பட்டு ஒரு துளை தோன்றியதும் அதன் வழியாகக் கிளம்பி வேகமாகப் பாய்ந்தோடி வருவதுபோல, தருமபுரியில் வெற்றி கண்டதால் உங்களுக்குக் கிளம்பியுள்ள எக்களிப்பைக் காட்ட, என்னை ஏசுங்கள்! தூற்றுங்கள்! கேவலமான வார்த்தைகளை வீசுங்கள்! அவைகளை நான் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, உம்மால் எனக்கு அளிக்கப்படும் அந்த விருதுகளுடன், நான் என் தோழர்கள் முன் நிற்க விரும்புகிறேன்.

அதிலே எனக்குக் கேவலம் வரும் என்று எண்ணுகிறீர்கள்—மக்களின் மனப்பாங்கு அறியாததால்!

அவைகளைத் தாங்கிக்கொள்ள நான் அஞ்சுவேன் அல்லது கூச்சப்படுவேன் என்று எண்ணுகிறீர்கள்—என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால்!

நமது அண்ணன் கேவலப்படுத்தப்படுகிறான், தரும புரியில் கழகம் தோற்றதால், என்பதனை எவ்வளவுக்கெவ்வளவு விளக்கமாகத் தெரிந்து கொள்ளுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது — எனக்குமட்டுமல்ல—கழகத்துக்கு.

இன்று நீங்கள் வீசும் இழிமொழி, நாளைய எதிர்காலத்தை எமக்கு ஒளி நிரம்பியதாக்கிட உதவட்டும்; தெம்பு இருக்கும்போதே திட்டித் தீர்த்துவிடுங்கள்; பொன்னான வாய்ப்பு அல்லவா இது உங்களுக்கு; எமது எதிர்காலம் பொற்காலமாக இருக்க வேண்டுமானால் இப்போது உம்முடைய இழிமொழிகளை நாங்கள் பெற்றாகவேண்டும்; நாராசநடை வல்லவர்களைக் கொண்டு நன்றாகத் தூற்றுங்கள், எங்கள் உள்ளத்தில் பாய்ந்திடும் விதமாக! எமது தோழர்களின் கண்கள் குளமாகும் விதமாக! தோல்வி ஏற்பட்டால் என்னென்ன கொடுமைகள் விளைந்திடும், எவை எவைகளைத் தாங்-