72
தமிழ்த்தாயே! உன் கண்ணீரைத் துடைத்து, நீதியை வெற்றி பெறச் செய்ய முடியாமற் போய் விட்டது. என்னை மன்னித்துவிடு! என்றன்றோ நாம் ஒவ்வொருவரும் மண்டியிட்டு முறையிட்டுக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது.
மகனே, மனம் தளர்ந்து போகக்கூடாது. நீதியின் பக்கம் நின்றாய், மகிழ்ச்சி! எனக்காகப் பரிந்து பேசிப் பணியாற்றினாய், பெருமைப்படுகிறேன். உன் வல்லமை வளரும், தோல்வி வெற்றிக்கு வழி அமைக்கும் என்று கூறித் தமிழ்த்தாய் நம்மைத் தேற்றுவாள் என்பது உறுதி.
நியாயம் சில வேளைகளில் வெற்றிபெறாமற் போய் விடக்கூடும், அதனாலேயே நியாயத்தின் பக்கம் நிற்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு அறிவாளர் எவரும் வரமாட்டார்கள். நியாயம் வெற்றி பெறத்தக்க விதமாக உழைப்பதற்கான வலிவினைத் திரட்டிக் கொள்வோம் என்ற உறுதியைப் பெறுவதே தீரர் கடன்.
நஞ்சு கொடுத்துச் சாக்ரடீசைச் சாகடித்துவிட்டதாலேயே, சாக்ரடீசின் கொள்கையைச் சாகடித்துவிட முடிந்ததா! இரண்டு அங்குல நீளமே உள்ள தேள், கொட்டினால் ஆறடி ஆள் கூடத் துடிதுடிக்கிறான்; அதனாலேயே ஆளைவிடத் தேள் வலிவுள்ளது என்றாகிவிடுமா; ஆளிடம் அந்தத் தேள் சிக்கவில்லை, கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை நிலை. தருமபுரியில் கழகத்தைத் தோற்கடித்து விட்டதாலேயே காங்கிரசுக்கு எதிராகத் திரண்டு கொண்டிருக்கும் எதிர்ப்பும், அந்த எதிர்ப்பை உண்டாக்கிக் கொடுக்கும் மக்களின் எழுச்சியும் மடிந்துவிட்டது என்றாகிவிடாது.
தருமபுரியில் பெற்ற வெற்றி காரணமாகக் காங்கிரஸ் கட்சி தனது வல்லமைபற்றி மிக அதிகமான கணக்குப் போட்டுக் கொள்ளுமானால் அது நமக்கு நல்லதுதான். தொடர்ந்து தவறுகளைச் செய்யவும், மக்களின் மனக்கொதிப்பை அதிகமாக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடவும் அடக்குமுறையை அவிழ்த்து விடுவதிலே சுவை காணவும், தனது ஊழலாட்சியைத் திருத்திக் கொள்ளாதிருக்கவும், துணிந்து விடும். அந்தக்கட்டம் வேகமாக வளரும்போது, இதுவரை அக்கறையற்று இருந்துவந்த