உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கண்டிருக்கிறேன் அந்தக் கயமையை—என்று இராஜாராம் கர்ஜனை புரிந்தார் ; தர்க்கம் நடத்தினார்; ஏடுகள் தீட்டினார்; வாதுக்கு வந்தோரை முறியடித்தார்; வஞ்சகரின் எதிர்ப்புகளைச் சமாளித்தார், சீமை சென்று பேசினார்; பார்லிமென்டில் சொற்பெருக்காற்றினார்; வென்றார்; சதி எனும் மடமையைக் கொன்றார்.

பாரதத்தில் இப்போது இங்கொன்றும் அங்கொன்றுமாக ‘சதி’ நடக்கிறது.

சட்டம் இருக்கிறது; எனினும் ‘சதி’ நமது பாரதப் பண்பாட்டின் சின்னம் என்று கருதுவோர் இருக்கிறார்கள்; அவர்களிடம் ஒரு புதுத் துணிவும் காணப்படுகிறது.

“மதுந்தா என்ற இடத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன் கணவர் இறந்துவிட்டதும் அவருடனேயே ‘உடன் கட்டை’ ஏறியதாகச் சென்ற கிழமை ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.

தனது கணவன் உடல் எரிந்துகொண்டிருக்கும் போது, மஞ்சள் நிற சேலை அணிந்துகொண்டு கழுத்தில் ஒரு மாலையுடன் தோன்றி மயானத்தில் கூடியிருந்தவர்களிடம் தான் உடன் கட்டை ஏறப்போவதாகத் தெரிவித்துவிட்டு நெருப்பில் குதித்துவிட்டாளாம்.

அந்தப் பெண்ணை எவரும் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவில்லை.

நெருப்பில் விழுந்த அந்தப் பெண், துடித்துத் துடித்து அலறினாளாம். ஆனால் அந்த அலறலைவிட அதிக உரத்த தொனியில் தாரை, தப்பட்டைகள் முழங்கினவாம்; குருக்கள்மார் வேதங்கள் ஓதினராம், சில் நிமிட நேரத்தில் அந்தப் பெண் சாம்பலானாளாம்.”

நாடு, எவ்வழி நடத்திச் செல்லப்படவேண்டும் என்பதில் ஓர் திட்டவட்டமான கொள்கையில்லாததால், விளையும் கோரங்களில் இஃதொன்று. வேறென்ன?

பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்துச் சுற்றுப் பயணத்தில் ஓரிடத்தில்,

“நாடு இப்போது பழைய காலத்திலும் இல்லை; புதிய காலத்திலும் இல்லை, இவை இரண்டும் போட்டியிடும் ஓர் இடைக்காலத்தில் இருக்கிறது” என்ற கருத்தைக் கூறியிருக்கிறார்.

அவர், பழமையின் பக்கமா, புதுமையின் சார்பிலா என்பதை அறிவிக்கவில்லை. அவருடைய அலுவல்கள் அதனை அறிவிக்கின்றன.