15
யமதர்மராஜனுடைய வாசலில் இரண்டு நாய்கள் காவலாம்.
நாய்களுக்கு இங்கு இந்தப் பூஜை செய்தால், யமதர்மனுக்குத் திருப்தியாம்.
யமனுக்குச் சந்தோஷம் என்றால் என்ன—மரண பயம் கிடையாது.
எனவே, இந்த நாய் பூஜை நடக்கிறது—தீபாவளிப் பண்டிகையின் போது.
நாய்க்கு நடத்தப்படும் பூஜை போலவே, எருமைக் கிடாவுக்கும் பூஜையாம்.
நேபாளநாட்டுத் தீபாவளி இவ்விதம் இருக்கிறது.
இங்கே பசுவுக்குப் பூஜைசெய்வோரும், பாம்புக்குப் பால் ஊற்றுவோரும், செச்சே, இது என்ன பைத்யக்காரத்தனம், நாய்க்குப் பூஜையா, மஞ்சள் குங்குமமாம், மாலை மரியாதையாம், பூஜையாம் நாய்க்கு. இதுவா பக்தி? இதுவா மதம், என்று கேலி பேசுவர்.
இங்கு பசு, பாம்பு—அங்கு நாய்.
எல்லாம், மதத்தைப்பற்றி மனதிலே குடிகொண்டிருக்கிற மயக்கத்தின் விளைவுதான்.
நாய்களுக்குப் பூஜை செய்யும் நாடு நேபாளம், என்று ஒரு மேயோ கூறிவிட்டால் மட்டும், கோபம் கொப்பளித்துக் கொண்டு வருகிறது; நாம் மதத்தின் பெயரால் மூடத்தனம் நிலவுகிறது என்று கூறினாலோ, ஏடா, மூடா, எமது மார்க்கத்தில் பொதிந்து கிடக்கும் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் நீ அறிவாயா? என்று பேசிடும் பெரியவர்கள் கிளம்பிவிடுகிறார்கள், இதோ நாய்களுக்குப் பூஜை நடக்கிறது.
அருவருப்பு அடைவோர் இல்லை, வேண்டுமானால், விஷயம் கேள்விப்பட்டதும், இங்கு அந்த பூஜை முறையின் விவரம் தெரிந்துகொள்ள ஆவல்கொள்வோர் கிடைப்பர்.
“நாய் என்றால் கேவலம் என்று பொருளா ? தெரியுமா, பைரவர் என்று நமது புனித ஏடுகளில் கூறப்பட்டிருப்பது, அவருக்கு வாகனம் நாய்தான்” என்று ஆதாரம் பேசுவர் பஜனைக் கூடத்தார்.
நாயைக் கும்பிடுவதுபற்றி இந்த சூனாமானாக்கள் கேலி பேசுகிறார்களே, நாயிடம் கொஞ்சி விளையாடலாமா, நாய்க்கு பிஸ்கட்டும் பாலும் கொடுப்பதைக் கண்டித்தார்களா? நாய் வளர்த்து, நம்மையும் நாய் வளர்க்கப் பழக்கப்படுத்திய வெள்ளைக்காரனைக் கண்டித்தார்களா? நாய், சுதந்திரப் போருக்குத் தியாகம் செய்தது இவர்களுக்குத் தெரியுமா ? நாய் செய்த தியாகம்கூடச் செய்யாதவர்கள்தான் இந்தச் சூ. மா. க்கள்,