உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதம்: 27

ஹெலிகாப்டரும் இரதமும்!

★ வேதகாலமும் விஞ்ஞானப் பொருள்களும்—நாய் பூஜை—புல்கானின் வரவேற்பு.

தம்பி,

ஊரெல்லாம் ஒரே விழாமயம், பார்க்கிறாயல்லவா !! ஆசியாவின் ஜோதி வந்தார்—விழா காட்டப்பட்டது ! ஒரு திங்களாயிற்று, இதோ பாபு ராஜேந்திர பிரசாத் பவனிக்கான விழா நடைபெறுகிறது ! இது கண்டு மகிழ்வோரின் மனம், விழாக் கோலத்தைக் கலைத்துக்கொள்வதற்குள், புல்கானின் வருகிறார், பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது. அவருக்கு நடத்தப்படும் விழாவிலே இன்னின்ன வண்ணம் தெரியவேண்டும் என்று திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே, நேபாள நாட்டு மன்னரும், மஹாராணியாரும் வரவேற்கப்படவேண்டிய விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாலம் விமான நிலையத்தில் வரவேற்பு—குழந்தைகள் பூச்செண்டு அளித்தல்—முப்படைப் பிரிவினரைப் பார்வையிடல், நேரு பண்டிதரின் கைகுலுக்குதல், ராஜ கட்டம் சென்று காந்தியார் சமாதியில் மலர் சொரிதல், ஜனாதிபதி மாளிகையில் விருந்து, அதை அடுத்து பார்லிமெண்டில் பேச்சு, அதை அடுத்து ஒரு விருந்து, பிறகு ‘தாஜ்மஹால், ஜூம்மா மசூதி, தங்கக் கோயில்’ ஆகிய காட்சிகளைக் கண்டு வியப்படைதல், இடையிடையே இன்னிசை, நடனம்—பிறகு பக்ரா—நங்கல், சிந்திரி, சித்தரன்ஜன், இப்படிப்பட்ட ‘க்ஷேத்திரங்களைக்’ கண்டு மகிழ்தல், பிறகு தெற்கே திருவிழாக் கோலம், திரும்ப-

680—II—1