உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெறும் யோக்யதையைப் பெற்றுவிட்டார், என்பது பொருள்! இதிலே வாதத்துக்கு இடமில்லை!

தேர்தல் காலத்திலே, இதுபோலப் பேசித்தான், ‘வெற்றி’ பெற்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், அந்தத் திருவாளர் என்ன நன்மையைச் செய்யப் போகிறார், அவருக்குள்ள ஆசாபாசங்கள் யாவை, திறமை அனுபவம் என்ன, என்பது பற்றிய நினைப்பே மக்கள் மனத்திலே இருக்க முடியாதபடியான, பிரசாரம் நடைபெற்றது; இது ஒரு கட்சியின் மகத்தான வெற்றிக்கு உதவிற்று—ஆனால் அதே வெற்றி, பொதுமக்களின் நலனைக்கோரி அமைக்கப்பட்ட மக்களாட்சி முறைக்கு ஊறுசெய்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி மாலை அணிந்து—மக்களாட்சி முறைக்கு அதுவே மரண ஓலையாகவுமாகிவிட்டது!

சில ‘தொகுதிகளில்’, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களின் அறிவுச் சூன்யத்தைப் பற்றி, மக்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டே, “ஓட்டு” அளித்தனர்—காரணம், அவர்கள், தாங்கள் தரும் ‘ஓட்டு’ அந்த ஆசாமிக்கு அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு—என்று நம்பினர்—நம்பும்படி செய்யப்பட்டனர்.

“இது வெறும் ‘கைகாட்டி’ தானேப்பா!”

“கல்லுப்பிள்ளையார் போல இருக்கும்—வாயைத்திறக்காது”

“திறவாமலிருந்தால் தானய்யா நல்லது! திறந்தால் தெரிந்துவிடும், இது வெறும் பாண்டம் என்பது”

“ஆமாம், ஆமாம்! புகையிலை விரித்தால் போச்சு! புண்ணியவான் பேசினால் போச்சு!”

“உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது இந்த ஆசாமி காங்கிரசைக் கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தாரே...”

“இப்போது எப்படிக் காங்கிரசில் சேர்ந்தார் என்று கேட்கிறாயா? இது தெரியவில்லையா உனக்கு! காங்கிரசில் சேர்ந்தால்தான், சட்ட சபைக்குப் போக முடியும் என்பதனால்தான்.”