ஒடித்த கொடிமரங்கள் கொஞ்சமா! கொளுத்திய கொடிகள் கொஞ்சமா!
இட்டுக் கட்டியதும் இருட்டடிப்பு நடத்தியதும் திறமையுடன் அல்லவா!
கழகத் தலைவர்களை ஏசிப் பேசிட, வசைமொழிகள் சாதாரணமாகவா! தனித் தரமுள்ள நாராச நடையிலல்லவா!!
பிறப்பு, வளர்ப்பு, குடும்பம், கொடி வழி என்ற எதையாவது விட்டார்களா!
மண்ணாசைக்காரன், பெண்ணாசைப் பேயன், பொன்னாசை பிடித்தோன் என்றெல்லாம் கழகத்தின் முன்னணியினரை ஏசியது கொஞ்சமா!
கூத்தாடிகள்!— என்றல்லவா இகழ்ந்தனர்—இன்று ‘கலைஞர்களை’ நாங்களும் காட்டுகிறோம் என்று பேசிடும் இந்தக் குணாளர்கள்!
எத்தனை விதவிதமான எதிர்ப்பு மாநாடுகள், ஒழிப்பு மாநாடுகளை நடத்திக் காட்டினர்!
உள்ளூர்ச் சரக்குப் போதாது என்று வெளியூர்ச் சரக்குகளை வேண மட்டும் வரவவைத்துக் கூவிக் கூவி விற்றார்களல்லவா!
கருப்புக் கொடியா! காட்டுபவன் கரத்தை ஒடி என்ற அகிம்சைப் பேச்சு வழிந்ததே!
எதைச் செய்யாமல் விட்டார்கள்!எல்லாம் செய்து பார்த்து, கழகம் வளருவதைத் தடுக்க முடியவில்லை.
வெட்ட வெளியில் இருந்த கழகம் சட்ட சபைக்கே வந்துவிட்டது!
சட்ட சபையிலும், கழகம் அதிகாரம் பெற்ற எதிர்க்கட்சியாகி விட்டது!இந்த வளர்ச்சியைத் தடுத்திட முடியாத இதே வல்லமைசாலிகள்தாம், இப்போது 67000 அடி ஆழமான குழி தோண்டப் போகிறார்களாம்!